கோடைக் காலத்தில், நம் உடலில் நீரின் அளவுக் குறைவதைக் கட்டுப்படுத்தி, நீர்ச்சமநிலையை உருவாக்குவதில், எலுமிச்சைப்பழத்தின் பங்கு முக்கியமானது. இதனைக் கருத்தில்கொண்டே, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், எலுமிச்சைப் பழ ஜூஸை மக்கள் விரும்பிப் பருகுகிறார்கள். ஆனால், வரத்துக் குறைவு, தேவை அதிகம் உள்ளிட்டக் காரணங்களால், எலுமிச்சைப்பழத்தின் விலை, விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில், குறிப்பாகச் சென்னை, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.350 முதல் ரூ.400-வரைக்கும், ஒரு எலுமிச்சம் பழம் 15 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ராமநாதபுரம் அரண்மனை மார்க்கெட் பகுதிகளில் விற்பனைக்காக மதுரையில் இருந்து கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ள எலுமிச்சை பழங்களின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு பல மடங்கு உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.300 முதல் 400 வரையும், 40 கிலோ ஒரு மூடை 10 ஆயிரம் ரூபாய் வரையும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் புலம்புகின்றனர்.
வியாபாரம்
இதுபற்றி ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் எலுமிச்சை பழ வியாபாரி ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
15 ஆண்டுகளுக்கும் மேலாக எலுமிச்சை பழம் வியாபாரம் செய்து வருகிறேன். இந்த ஆண்டு போல் எந்த ஆண்டும் எலுமிச்சை பழம் இந்த அளவுக்கு விலை உயர்ந்தது கிடையாது. ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.250-ல் இருந்து ரூ.300 வரை விலை உயர்ந்துவிட்டது. 40 கிலோ மூடை ஒன்று 9 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.
மதுரையில் இருந்து தான் ராமநாதபுரம் பகுதிக்கு விற்பனைக்காக எலுமிச்சை பழம் கொண்டுவரப்படுகின்றன. மதுரைக்கு ஆந்திராவில் இருந்து எலுமிச்சை பழம் கொண்டு வரப்படுகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி நடந்து வருவதால் எலுமிச்சை பழங்களின் தேவையும் அதிகரித்து உள்ளதால் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய காரணம்
அதுபோல் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்களில் சித்திரை திருவிழா நடந்து வருவதோடு ரம்ஜான் பண்டிகைக்கான நோன்பு திறப்பு நடந்து வருவதால் தினமும் மாலை 6.30 மணிக்கு நோன்பு திறக்கும் நேரத்தில் எலுமிச்சை பழச்சாறு குடித்து வருவதால் எலுமிச்சைபழம் விலையும் உயர்வதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனவே மக்கள் மிகுந்த அதிர்ச்சியுடன் எலுமிச்சைப்பழத்தின் விலையைக் கேட்டுக் கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.
மேலும் படிக்க...
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு- கல்வித்தகுதி 8ம் வகுப்பு!
Share your comments