1. தோட்டக்கலை

லாபகரமான பட்டு உற்பத்தி தொழிலிற்கு ஆதாரமாகும் மல்பெரி சாகுபடி

KJ Staff
KJ Staff

நம் இந்திய நாட்டில், பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மல்பெரிச்செடி வளர்ப்பிற்கான, சாதகமான சூழ்நிலைகள் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் நிலவுகிறது. இந்த மாநிலங்கள் மொத்த மல்பெரி வளர்ப்பில் 97 சதவீதமும், பட்டு நூல் உற்பத்தியில் 95 சதவீதமும் கிடைக்கிறது.

தமிழ்நாடு பட்டு உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ளது. பல செயல்பாட்டு திட்டங்களினால் பட்டு வளர்ப்பானது, தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளிலும் பரவியது. 1979 ஆம் ஆண்டிலிருந்து பட்டு தொழில் வணிக துறையின் கீழ் சேலத்தை ஒரு மேம்பாட்டு மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஆராய்ச்சி நிலையங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய செலவு குறைக்கும் தொழில்நுட்பங்களினால், (பட்டுப்புழுவிற்கான தனி அறை, மல்பெரி தண்டு அறுவடை முறையில் புழு வளர்ப்பு, இளம்புழுவை விவசாயிகளுக்கு வழங்குதல்) பட்டு மகசூலும் இலாபமும் விவசாயிகளுக்கு அதிகமாக கிடைக்கிறது.

பட்டு புழு வளர்ப்பிற்கு ஆதாரமான மல்பெரி சாகுபடு       

பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரம் மல்பெரி இலைகளே. இப்பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளைத் தவிர வேறு எந்த இலைகளையும் உணவாக ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே, மல்பெரி இலைகளை உற்பத்தி செய்த பின்னரே பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ள முடியும். மல்பெரிச் செடியானது வருடம் முழுவதும் வளர்ந்து பயன் தரவல்லது. இது பெரும்பாலும் இறவைப் பயிராகவே சாகுபடி செய்யப்பட்டாலும், மானாவாரித் தோட்டங்களும் பராமரிக்கப்படுகிறது. நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலங்களே மல்பெரிக்கு மிகவும் ஏற்றதாகும். எனினும் மற்ற இடங்களிலும் மல்பெரிப்பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் மல்பெரி செடி 41,624 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. இவை ஈரோடு, கோவை, தர்மபுரி, சேலம், மதுரை, வடஆற்காடு, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.

மல்பெரி இரகங்களில்  இறவைப்பபயிருக்கு கன்வா 2, எம்ஆர்.2, மற்றும் வி.1 இரகங்கள் ஏற்றதாகும். இவற்றுள் வி.1 இரகமானது அதிகபட்சமாக ஆண்டிற்கு ஒரு எக்டருக்கு 60 டன் இலை மகசூல் தரவல்லது. மற்ற இரகங்கள் ஆண்டிற்கு எக்டருக்கு 35-40 டன் இலை மகசூல் தரவல்லது. மானாவாரிப் பயிரிடுவதற்கு எம்.ஆர்.2, எஸ்.1635, எஸ். 34 மற்றும்  ஆர்.எப்.எஸ் 175 போன்ற இரகங்கள் ஏற்றவைகளாகும்.

மல்பெரி மேலாண்மை (நாற்று உற்பத்தி, அறுவடை மற்றும் மகசூல்)

மல்பெரி நாற்று உற்பத்தி

மல்பெரி செடிகள், விதைக்குச்சிகள் மூலமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. மல்பெரி செடியில் அயல் மகரந்தச்சேர்க்கையின் மூலம் விதைகள் உருவாகின்றன. இவ்விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாற்றுக்களின் குணாதிசியங்கள் தாய்ச்செடியை ஒத்திருக்காது என்பதால் விதைகள் மூலம் இனப்பெருக்கம் மேற்கொள்ளப் படுவதில்லை.

மல்பெரியை விதைக்குச்சிகள் (Cuttings) மூலமாக இனப்பெருக்கம் செய்ய முடியும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் மல்பெரி சாகுபடி செய்ய 20சென்ட் நாற்றாங்கால் தயார் செய்ய வேண்டும். முதலில் நாற்று பாத்தியை 1மீ அகலம், 10 செ.மீ உயரம், 3மீ நீளத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதைக்குச்சிகளை பூச்சி மற்றும் நோய் தாக்காத, வேர் அழுகல் இல்லாத, 6-8 மாத வயதுடைய செடிகளிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.தேர்வு செய்த குச்சிகளை3-4 பருக்கள் இருக்குமாறு, 15-20 செ.மீ நீளமுள்ளதாக வெட்டிக் கொள்ள வேண்டும்.  வெட்டும்போது ஒவ்வொரு விதைக்குச்சியின் மேல் நுனியில் நேராகவும், அடிப்பகுதியில் சாய்வாகவும் பட்டை உரியாமலும் பிளவுபடாமலும் வெட்டவேண்டும்.

விதைக்குச்சிகளின் வேர்விடும் திறனை அதிகரிக்க அவற்றை அசோஸ்பைரில்லம் கரைசலில் நனைத்து நடவு மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் நீரில் கரைத்து அதில் விதைக்குச்சிகளின் அடிப்பாகம் நனையுமாறு 30 நிமிடம் ஊறவைத்து பின் நடவேண்டும்.

நீர் பாய்ச்சுதல் மற்றும் களை மேலாண்மை

நடவிற்குப் பிறகு வாரத்திற்கு இரண்டு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 32 மற்றும் 60வது நாளில் களை எடுக்க வேண்டும். நன்கு வளர்ந்த மூன்று முதல் ஆறு மாத நாற்றுகளை இடம்பெயர்த்து நடவு செய்யலாம்.

நடவு செய்தல்

மல்பெரிச் செடியை சாதாரண (90 - 90 செ.மீ அளவில்) இணை வரிசைகளாகவோ (75,105 - 90 செ.மீ) நடவு மேற்கொள்ளலாம்.

உரமிடுதல்

ஒரு ஏக்கர் நிலத்துக்கு,  வருடத்திற்கு  8 டன் தொழுஉரம் தேவைப் படும். இதை அடி கவாத்துக்குப் பிறகு இடவேண்டும்.

இறவைப்பயிருக்கு ஒரு ஆண்டிற்கு ஒரு எக்டருக்கு 300:120:120 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து சிபாரிசு செய்யப்படுகிறது. உயர் விளைச்சல் இரகமான வி.1ற்கு 375:140:140 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உரத்தை ஐந்து தவணைகளில் ஒவ்வொரு கவாத்திற்கு இடவேண்டும்.

உயிர் உரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் பயன்படுத்துவதன் மூலம் இரசாயன உரங்களின் செலவைக் குறைக்கலாம்.

அறுவடை மற்றும் மகசூல்

பட்டுப்புழுவின் வளர்ப்பு முறைக்கேற்ப தனியிலைகளாகவோ மற்றும் தண்டுகளாகவோ அறுவடை செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது மல்பெரி செடியின் உயரம் வடிவத்தைப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு செடியிலும் அதிகபட்சமாக 10-12 கிளைகளுக்கு மிகாமலும் மிகவும் ஒல்லியான கிளைகளை அகற்றியும், செடியைப் பராமரிக்க வேண்டும். இலைவழி ஊட்டச்சத்துக்களான செரி பூஸ்ட் (Seri Boost) (அ) போஷன் (Poshan) ஏதேனும் ஒன்றை பயன்படுத்துவதன் மூலம் அவை ஒளிச்சேர்க்கையை துரிதப்படுத்தி இலையின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது.

காலை அல்லது மாலை நேரங்களில் அறுவடை செய்வது சிறந்தது. அறுவடை செய்த இலைகளை ஈரமான சாக்குத் துணியில் வைத்துக்கொள்வதன் மூலம் இலையின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும். முதிர்ந்த புழு வளர்ப்பில் தண்டு அறுவடை முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. ஆகவே மல்பெரியை தண்டு அறுவடை செய்து வேலையாட்கள் மற்றும் நேர செலவைக் குறைக்கலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செடியினை அடிவெட்டு வெட்டி பராமரிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் செடி நட்டதிலிருந்து 12 முதல் 15 வருடம் மகசூல் குறைவின்றி தோட்டத்தைப் பராமரிக்கலாம்.

மல்பெரிச் செடி - நோய் மற்றும் பூச்சி தாக்குதல் மேலாண்மை

1. வேரழுகல்

வேரழுகல் நோயானது மேக்ரோபோமினா மற்றும் ப்யூசேரியம் போன்ற பூஞ்சாணங்களால் ஏற்படுகின்றது.

நோயின் அறிகுறிகள்

கோடைக்காலங்களில் இந்நோயின் தாக்குதல் அதிகம் காணப்படும்.

பாதிக்கப்பட்ட செடிகளின் ஆரம்ப நிலையில்  இலைகளின் ஓரங்கள் கருகி பின்  செடி முழுவதும் வாடிக் காணப்படும்.

அடித் தண்டுப்பகுதியில் கருப்பு நிறத்தில் பூஞ்சாணம் வளர்ந்து படர்ந்திருக்கும்.

இந்நோய் மண் மற்றும் நீர் மூலமாகப் பரவுகிறது

மேலாண்மை

எக்டருக்கு 20 டன் என்ற அளவில் தொழு உரம் இடுவதன் மூலம் இதன் சேதத்தைத் தவிர்க்கலாம்.

நோயின் ஆரம்பக் காலத்தில் வட்ட வடிவ பாத்திகளை அமைத்து காப்பர் ஆக்ஸிகுளோரைடு (2 கிராம், லிட்டர் அளவில்) வேரில் ஊற்றவேண்டும்.

செடிகளுக்கு நீர்ப்பாய்ச்சும் போது தாக்கப்பட்ட செடிகளிலிருந்து மற்றசெடிகளுக்கு நீர் பரவாமல் வட்டப்பாத்தி அமைப்பது அவசியம்.

நோய் தாக்கப்பட்ட காய்ந்த செடிகளை வேரோடு எரித்துவிடவேண்டும்.

நன்மை செய்யும் பூஞ்சாணமாகிய டிரைக்கோடெர்மா விரிடிகளை ஒரு செடிக்கு 25 கிராம் என்ற அளவில் தொழு உரத்துடன் கலந்து தாக்கப்பட்ட செடிகளுக்கும் மற்றும் அதன் அருகிலுள்ள செடிகளுக்கும் இடவேண்டும்.

உயிர்ப்பூஞ்சாணக் கொல்லியான ‘பேசில்லஸ் சப்டிலிஸ்’ என்ற பாக்டீரியாவை ஒரு செடிக்கு 25 கிராம் என்ற அளவில் நடவு செய்யும் போதோ அல்லது கவாத்து செய்யும் போதோ வேர்ப்பகுதியில் இடவேண்டும்.

2. சாம்பல் நோய்

இது ‘வைல்லோடிக்னா கொரிலியே’ என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது.

நோயின் அறிகுறிகள்

மல்பெரி இலைகளின் அடிப்புறத்தில் வெள்ளை நிறத்தில் பவுடர் தூவியது போல் திட்டு திட்டாக இருக்கும். இதேபோல் மேல்புறத்திலும் தோன்றும் பின்பு இலைகள் முழுவதும் பரவிவிடும். வெள்ளைநிற புள்ளிகள் கருப்பு நிறமாக மாறி பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சளாக மாறி உதிர்ந்துவிடும். இதன் சேதம் 10-15 சதம் விளைச்சலைப் பாதிக்கும்.

மேலாண்மை

அகன்ற இடைவெளி விட்டுப் பயிரிடுவதன் மூலம் செடிகளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைத்து சூரியஒளி படுவதால் இந்நோயின் தீவிரம் குறையும்.

நலிந்த ஒடிந்த காய்ந்த கிளைகளை அவ்வப்போது அகற்றிவிடவேண்டும்.

களைகள் இல்லாமல் வைத்திருக்கவேண்டும்.

அதிக மழை பெய்யும் மலைப்பிரதேசங்கள் இதன் தீவிரம் அதிகமாக இருக்கும்பொழுது கார்பண்டிசிம் அல்லது டினோகாாப் 0.2 சதம் (2 கிராம், லிட்டர் நீருக்கு) இந்நோயின் அறிகுறிகள் ஏற்பட்டவுடன் தெளிக்கவேண்டும். மீண்டும் 15 நாட்கள் கழித்து மறுமுறை தெளிக்கவேண்டும். மருந்து தெளித்தபின்பு 15 நாட்களுக்கு இலைகளை உணவாகப் புழுக்களுக்கு பயன்படுத்தக்கூடாது.

3. துரு நோய்

இந்நோய் ‘பெரிடியோஸ்போரா மோரி’ என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது.

 நோயின் அறிகுறிகள் மற்றும் சாதகமாக சூழ்நிலை

இலைகளின் அடிப்புறத்தில் ஆரம்பத்தில் அதிக எண்ணிக்கையில் மிகவும் சிறிய வெளிர்ய பழுப்பு நிறத்தில் தோன்றும் பின்பு ஆழ்ந்த பழுப்பு நிறமாக மாறி துரு போன்ற புள்ளிகள் தோன்றும்.

இந்நோய் குளிர்காலங்களில் (நவம்பர் முதல் ஜனவரி) அதிகமாக இருக்கும்.

மேலாண்மை

0.2 சதம் கார்பெண்டிசம் அல்லது குளோரோதலானில் (2 கிராம் லிட்டர்) தெளிக்கவேண்டும்.

4. நூற்புழுக்கள்

உலக அளவில் 32 வகையான நூற்புழுக்கள் மல்பெரியைத் தாக்குகின்றன. அவற்றுள் மிக முக்கியமானது மெலாய்டோகைன் இன்காக்னிட்டாஎன்ற நூற்புழு. அது மல்பெரியில் வேரினைத் தாக்கி வேர் முடிச்சுகளை உருவாக்குகின்றன.

இச்சேதத்தினால் செடி வளர்ச்சி இன்றி, பச்சையமிழந்து, வாடிக் காணப்படும்.

இந்நூற்புழுக்களின் சேதம் மல்பெரி தோட்டங்களில் ஆங்காங்கே காணப்படும்.

மேலாண்மை

புங்கம் இலை மக்குகளை 1 டன், எக்டர் என்ற அளவில் இட்டு நூற்புழு சேதத்தைக் கட்டுப்படுத்தலாம்.

ஊடுபயிராக சாமந்திச் செடிகளைப் பயிரிட்டு நூற்புழு சேதத்தைக் குறைக்கலாம்.

மக்கிய குப்பை, தொழு உரம், வேப்பம்புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு மற்றும் மக்கிய கரும்புச்சக்கை கழிவு ஆகியவற்றை இடுவதினால் சேதம் குறைகிறது.

கார்போபியூரான் 5 கிராம் மற்றும் போரேட் 2 கிராம் என்ற அளில் செடிகளில் வேர்ப் பகுதியில் இடுவதனால் சேதம் குறைகிறது.

பூச்சி தாக்குதல்

மல்பெரி செடியை தாக்கும் பூச்சிகளில் மிகவும் முக்கியமாக விளங்குபவை மாவுப்பூச்சி, இலை பிணைக்கும் புழு, இலைப் பேன், கரையான் போன்றவையாகும்.

மாவுப்பூச்சி

வெள்ளையாகப் பஞ்சு போல படர்ந்த முட்டைகளுடன் கூடிய இந்தப் பூச்சிகள், கூட்டமாக இலையின் நரம்புகள், இளம் தண்டுகளில் பரவி சேதாரத்தை ஏற்படுத்தும். இவை இளம் தண்டின் சாறினை உறிஞ்சுவதால் இலைகள் சிறுத்து மஞ்சள் நிறமாகி பின்னர் உதிர்ந்து விடுகின்றன. இந்தப் பூச்சிகள் மல்பெரி மட்டுமல்லாது பப்பாளி, மரவள்ளி, பார்த்தீனியம், துத்தி, செம்பருத்தி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட பயிர்களைத் தாக்கவல்லது. இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அசிரோபேகஸ் பப்பாயே எனும் ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 500 வீதம் பாதிக்கப்பட்ட வயல்களில் வெளியிட வேண்டும். மல்பெரி சாகுபடி செய்யும் பகுதிகளில் உள்ள களைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும், தாக்குதல் அதிகரிக்கும் பட்சத்தில் புரபனோபாஸ் அல்லது புப்ரோபெசின் என்னும் பூச்சிக்கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

இலை பிணைக்கும் புழு

மல்பெரி செடியின் இலைகளின் நுனிப் பகுதியில் இளம் புழுக்கள் இருந்து கொண்டு இலையின் திசுக்களை உண்ணும். வளர்ந்த புழுக்கள் வேகமாக இலைகளை உண்பதுடன் அதன் கழிவுகளை வெளியேற்றுவதால் அவை பட்டுப்புழு உண்பதற்கு உதவாது. இதனால் இலைகள், செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்.

இத்தகைய புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த மல்பெரி செடிகளை கவாத்து செய்த உடன் நீர் பாய்ச்சுவதன் மூலம் கூட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். மேலும், டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஹெக்டருக்கு 5 அட்டை வீதம் கட்ட வேண்டும்.

மேலும், தாக்குதல் தீவிரமடையும் பட்சத்தில் டைக்குளோர்வாஸ் என்னும் பூச்சிக் கொல்லி 1 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைப்பேன்    

இந்தப் பூச்சிகள், இலைகளின் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளைச் சுரண்டி அதன் சாற்றினை உறிஞ்சி விடுகின்றன. இந்தப் பூச்சிகள் தாக்கப்பட்ட இலைகளில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுவதால் அவை பட்டுப்புழு உணவாக பயன்படுத்த முடியாது.

மேலும், தாக்குதல் தீவிரமடையும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட இலைகள் வாடியும், இலைகள் சிறுத்தும் வெளிறிய கோடுகளுடன் காணப்படும். இந்த வகை பூச்சிகளை கட்டுப்படுத்த கைத்தெளிப்பானில் தண்ணீரைக் கொண்டு தெளிப்பதன் மூலம் பேன்கள் நீருடன் கழுவிச் செல்லப்படுகின்றன. ஏக்கருக்கு 20 மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை வைப்பதன் மூலம் கவர்ந்து அழிக்கலாம். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 3 மில்லி வீதம் வேப்பெண்ணையை கலந்து தெளிப்பதன் மூலமும் இலைப்பேனை கட்டுப்படுத்தலாம்.

 

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN 

English Summary: mulberry cultivation a introduction for silk warm farming

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.