செக்கச்சிவப்பாகச் சிவந்திருக்கும் செம்பருத்தி. வீடுதோறும் வளர்க்கப்படும் செம்பருத்திக்கு, ஆரோக்கியம், பூஜை, சித்த மருத்துவம் என அனைத்திலும் இன்றியமையாத பங்கு உண்டு.
உடல், பொருள், ஆவி எனக் கூறுவதைப்போல், இதன் இலை, பூ, வேர் என அனைத்துமே உடல் ஆரோக்கியத்தை அளித்தரும் அட்சயப்பாத்திரம்.
செம்பருத்திக்கு செவ்வரத்தை, செம்பரத்தை என்று வேறு பெயர்களும் உண்டு.
தென்கொரியா மற்றும் மலேசியாவின் தேசிய மலராக விளங்கும் செம்பருத்திக்கு, சீன ரோஜா என்ற மற்றொரு அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் செம்பருத்தியை ஆகஸ்ட் மாதத்தில் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும்.
இரகங்கள்
கோ 1(ஈரடுக்கு வகை), கோ 1(மஞ்சள் பூவில் சிவப்பு நிறப்புள்ளி), கோ 3(மஞ்சள், சிவப்பு நிற மலர்) ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை ஆகும்.
நடவு
ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் செம்பருத்தியை நடவு செய்வது நல்ல பலனைத் தரும். செம்மண், கரிசல் மண் நிலங்களில் நன்றாக வளரும் தன்மை உடையது.தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்தை இறைத்து நிலத்தை நன்றாக உழுது, மண்ணைப் புழுதியாக்கிக் கொள்ளவேண்டும். பின்பு செடிக்கு செடி 6 அடி, வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியில், அரையடி ஆழத்தில் குழியெடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒவ்வொரு குழியிலும் ஒரு கிலோ சாணம், ஒரு கிலோ மட்கிய தென்னைநார் ஆகியவற்றை இட்டு, தண்ணீர் ஊற்றி பத்து நாட்கள் அப்படியே விட்டுவிட வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 1200 செடிகள் தேவைப்படும்.தயார் செய்துள்ள குழிகளில் செம்பருத்திக் கன்றுகளை குழியின் மையப்பகுதியில் நடவு செய்து, மண் அணைத்து தண்ணீர்விட வேண்டும்.
நீர் நிர்வாகம் (Water Management)
நடவு செய்யும் போது நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மூன்றாம் நாள் உயிர்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடிகள் வளர்ந்த பின் எட்டு முதல் பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்தால் போதுமானது.
நடவு செய்த 2-ம் மாதத்தில் இருந்து, மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். பூக்கள் பூக்க தொடங்கிய பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, 200 லிட்டர் தண்ணீரில், 2 லிட்டர் மீன் அமினோ அமிலம் கலந்து, பாசன நீருடன் தரவேண்டும்.
உரம் (Fertilizers)
உரங்களை அளவாகத்தான் இடவேண்டும். அளவுக்கு அதிகமானால், இலை தடித்து பூக்களின் மகசூல் குறையும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை யூரியா இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
களை எடுத்தல்
முதல் எட்டு மாதம் வரை, மாதம் ஒரு களை எடுக்க வேண்டும். பிறகு செடிகள் அடர்த்தியாகி நிழல் கட்டிக் கொள்ளும். அதன் பின் தேவைப்பட்டால் களை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை பூக்களின் அறுவடை முடிந்த பின் கவாத்து செய்ய வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பொதுவாக இதில் நோய் எதுவும் தாக்குவது இல்லை. சில சமயங்களில் மாவு பூச்சி தாக்குதல் காணப்படும். மாவு பூச்சி தாக்குதல் இருந்தால் பச்சை மிளகாய் – பூண்டுக் கரைசலை அனைத்துச் செடிகளின் மீது தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.நன்கு வெயில் ஏறிய பிறகுதான் செம்பருத்தி இதழ் மலரும். அப்போதுதான் அறுவடை செய்ய வேண்டும்.
பூக்களைக் காம்புகளுடன் அறுவடை செய்து, இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பிறகு, எடை போட்டு விற்பனைக்கு அனுப்பலாம் அல்லது இருப்பு வைத்து வியாபாரிகளின் தேவையைப் பொருத்து அனுப்பலாம். ஆனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள பூக்களில் தண்ணீர் பட்டால், பூஞ்சாணம் உருவாகிவிடும். அதனால், ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மகசூல்
தினமும் சராசரியாக ஒரு ஏக்கரில் இருந்து 8 கிலோ பூக்கள் வரை கிடைக்கும்.
செம்பருத்தியின் மருத்துவப் பயன்கள்:
-
தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
-
செம்பருத்தி இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
-
இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழை, வெள்ளைத் தாமரையின் இதழுடன் சேர்த்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.
-
உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
-
செம்பருத்திப் பூவின் கஷாயமானது நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.
-
சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்கள் கொண்டது.
மேலும் படிக்க...
மலர் சாகுபடியில் நல்ல வருமானம் தரும் ஜாதிமல்லி!!
ஆயிரம் இதழ்களுடன் கூடிய அரிய வகை தாமரை - தாமரைப்பிரியரின் முயற்சிக்கு அமோக வெற்றி!
Share your comments