காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட பலவகையான தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தில், நடப்பு 2022-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பழப்பயிர்கள் மேம்பாட்டு இயக்கம், உயர் தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி, மலர் சாகுபடி மூலம் தினசரி வருமானம், சுவை தாளித பயிர் ஊக்குவிப்பு போன்ற பல்வேறு தோட்டக்கலை சார்ந்த திட்டங்களை, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார்.
தோட்டக்கலை திட்டங்களை செயல்படுத்த அரசாணை வெளியீடு
தோட்டக்கலை மேம்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம், 2022-23 ஆம் ஆண்டில், பல்வேறு திட்ட இனங்களை செயல்படுத்துவதற்கு ரூ.170.79 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு செயல்திட்ட அறிக்கையினை தயாரித்து, அதற்கான ஒப்புதலை ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுள்ளது. இதில், ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் 25,680 எக்டர் அளவுக்கு தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு முதற்கட்ட நிதியினை விடுவித்து, அதற்கான அரசாணை வேளாண் உழவர் நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
தோட்டக்கலை பயிர் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு எவ்வளவு மானியம்?
இத்திட்டத்தில் காய்கறிகள், பழங்கள், மலர்கள், சுவைதாளித பயிர்கள், போன்ற தோட்டக்கலை பயிர்களில் தரமான நடவுப் பொருட்கள் மற்றும் இடுபொருட்களை பெற்று, சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு ஆகும் மொத்த செலவில், அரசு 40% மானியம் வழங்குகிறது. இதற்கு முந்தைய பதிவுகளில், காய்கறிகள், பழப்பயிர்கள், மலர்கள் மற்றும் சுவைதாளிதப் பயிர்களுக்கு மானியம் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளன. இந்தப்பதிவில், கோக்கோ, முந்திரி சாகுபடிக்கான மானியம் பற்றி பார்க்கலாம்.
கோக்கோ, முந்திரி சாகுபடிக்கான மானியம்:
கோக்கோ, முந்திரி சாகுபடி செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு எக்டருக்கு ரூ.12,000/- மானியத்தில் நடவுப்பொருட்களும், இடுபொருட்களும் விநியோகம் செய்யப்படும். இதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், கீழே பதிவில் காணுங்கள்.
இத்திட்டத்தில் மானியம் பெறுவதற்கான தகுதிகள்
சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும், குத்தகை விவசாயிகளாக இருந்தால் 10 ஆண்டு காலத்திற்கு குத்தகை எடுத்து குத்தகையை பதிவு செய்த விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கும், சிறு, குறு, மகளிர் விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
- பட்டா
- சிட்டா
- அடங்கல்
- ஆதார் அட்டை
- புகைப்படம்
- வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.
முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
தேசிய தோட்டக்கலைத் திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை http://horticulture.tn.gov.in/tnhortnet/login.php என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள, இத்திட்டத்தின் மூலம் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி 25,680 எக்டர் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புடன், கூடுதல் வருமானமும் ஈட்டுவதற்காக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள, இத்திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெறுமாறு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க:
கலப்படம், கலப்படம், கலப்படம் கலப்படத்தை எப்படி அறிவது? சில வழிமுறை
Share your comments