தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தமிழ அரசு செய்து வருகிறது. அரசு 2022-23ஆம் ஆண்டின் வேளாண் பட்ஜெட்டிலும் இதற்கான அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பை அதிகரித்து, விளைச்சலைப் பெருக்கவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் 2022-23ஆம் ஆண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் பல்வேறு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரூ.27.50 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
தோட்டக்கலை பயிர்கள் (Horticulture Crops)
சாகுபடிப் பரப்பை அதிகரிக்க விதைகளும், நடவுக் கன்றுகளும் விநியோகம் செய்யப்படுகின்றன. கத்தரி, மிளகாய், தக்காளி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிப் பயிர்களில் குழித்தட்டு நாற்றுகளும், வெண்டை, முள்ளங்கி, கீரை, அவரை போன்ற காய்கறிகளில் விதைகளும் வழங்கி 7,100 ஏக்கரிலும், மா, கொய்யா, பப்பாளி, மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா போன்ற பழங்களின் சாகுபடியினை 2,938 ஏக்கரில் அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மல்லிகை, கனகாம்பரம், செண்டுமல்லி, ரோஜா போன்ற மலர் வகைகளை 1,888 ஏக்கரிலும், கொத்தமல்லி, மஞ்சள், இஞ்சி, மிளகு, கறிவேப்பிலை போன்ற நறுமணப் பயிர்களை 1,375 ஏக்கரிலும் சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தமாக 13,300 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களின் பரப்பினை அதிகரிப்பதற்குத் தேவையான விதைகளும் நடவுக்கன்றுகளும் 40 சதவிகித மானியத்தில் விநியோகம் செய்வதற்காக ரூ.8.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.27.50 கோடி நிதியில் தமிழக அரசு அறிவித்திருக்கும் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். அதற்கு தாங்களாகவோ அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மூலமாகவோ tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம்.
மேலும் படிக்க
விவசாயிகளுக்கு டிராக்டர்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
நெல்லை அரிசியாக மாற்றும் சிறிய இயந்திரம்: விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்!
Share your comments