கடலலைகள் மூலம் கீழைநாடுகளில் இருந்து கரையேறியதாகக் கருதப்பட்டாலும், நமது நாட்டில் கற்பகதரு என போற்றப்படுகிறது. இது பெரும்பாலும் எண்ணெய் வித்து பயிராக இருப்பினும், நாளடைவில் இளநீர் பருகும் மக்கள் பெருகிவரும் நிலையில், இது ஒரு உணவுப்பயிர் மற்றும் மருந்துப் பயிராக மட்டுமன்றி தொழிற்துறை தேவைக்கும் பெரிதும் கருதப்படுகிறது.
ஒருங்கிணைத்த மேலாண்மை முறையில் முக்கியமானவை
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்
வாழ்க்கை பருவம்
வயதில் முதிர்ந்த பெண் ஈக்கள், மஞ்சளை நிற நீள்வட்ட முட்டைகளை சுழல் வடிவ அமைப்புகளில் இ ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகள் மெழுகு பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் நகரும் தன்மை கொண்ட இளங்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்துகொண்டு இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளர்கின்றன.
நான்கு பருவங்களை கடந்த கூட்டுப்புழு பருவத்தை அடைந்து பின்னர் முதிர்ந்த ஈக்களாக வெளி வருகின்றன. சுமார் 20-30 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் காணப்படும் இவை காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களின் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தாக்குதலின் அறிகுறிகள்
இலைகளின் அடிப்பாகத்தில் சுருள் வடிவத்தில் முட்டைகள் காணப்படும். குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் ஓலைகளின் அடியில் இருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவக்கழிவுகள் கீழ்மட்ட அடுக்கில் உள்ள 10-12 ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன. இவற்றின் மேல் கேப்னோடியம் எனும் கரும்பூசணம் படர்கிறது. இப்பூச்சிகளின் பாதிப்பால் மகசூல் பெருமளவில் ஏற்படுவதில்லை. வெள்ளை ஈக்கள் அனைத்து தென்னை இரகங்களிலும் காணப்பட்டாலும், சௌகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, கென்தாளி குட்டை, மலேசியன் பச்சை குட்டை ஆகிய இரகங்களிலும் குட்டை யீ நெட்டை வீரிய ஒட்டு இரகங்களிலும் அதிகளவில் தாக்குதல் ஏற்படுகின்றன.
மாற்றுப் பயிர்கள்
இப்பூச்சிகள், வாழை, வெண்டை, சப்போட்டா, எலுமிச்சை, செம்பருத்தி ஆகிய பயிர்களிலும் மிக குறைந்த அளவில் காணப்படுகின்றன.
வளர் சுழல்
ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் பருவமழை குறைவினால் ஏற்பட்ட வறட்சி, அதிகளவு வெப்பம் மற்றும் குறைந்த காற்றின் ஈரப்பதம் ஆகியன இப்பூச்சியின் அதீத பெருக்கத்திற்கும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலாண்மை
மஞ்சள் நிறம் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்பட்ட ஓட்டும் பொறிகள் (நீளம் 3 அடி அகலம் 1 அடி) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்க வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும்.
பூச்சிகளின் வளர்ச்சியை தடுக்க, இலை மட்டைகளின் உள்ள ஓலைகளின் அடிப்புறத்தில் நன்கு படுமாறு தண்ணீர் தெளிக்கவும்.
கிரைசோபைட் இரை விழுங்கிகள் இந்த பூச்சிகளின் வளர்ச்சி நிலைகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் எக்டருக்கு 1000 என்ற எண்ணிக்கையில் விடவும்.
இவ்வகை வெள்ளை ஈக்கள் அதிகளவில் பரவும் போது காக்ஸிணெல்லிட் பொறி வண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். ஆகவே தோப்புகளில் இவ்வகை இயற்கை எதிரிகள் கொண்டு தாக்குதலுக்குள்ளான ஓலைகளை சிறிய அளவில் வெட்டி பாதிப்பு அதிகமாக இருக்கும் மரங்களின் மீது வைக்கவும்.
ஒரு லிட்டர் நீருக்கு வேப்பெண்ணை 30மிலி (அ) அசாடிராக்டின் 1 சதம் (2 மிலி) மருந்தை ஒரு மில்லி ஒட்டுதிரவத்துடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்புறம் தெளிக்கவும்.
கருபூசணத்தை நிவர்த்தி செய்ய மைதாமாவு கரைசலை (ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் பசை) ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்கவும்.
கவனத்திற்கு
அதிகளவு பூச்சி கொல்லிகள் உபயோகிக்கும் போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்துவிடுவதால், பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து நன்மை செய்யும் பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சாலச் சிறந்தது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments