மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைக்க நடவடிக்கையைத் தமிழ்நாடு முதல்வர் எடுத்து, அனைத்துப் பிரிவினரிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ்(OPS) வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 'ஊரகப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை சீராக்கும் வகையிலும், கிராமப்புற மக்களின் வேலைக்கான உத்தரவாதத்தை நிலைநாட்டும் வகையிலும் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் ஏழை எளிய மக்களுக்கான ஊதியம் ஒரு சில பிரிவினருக்கு, தாமதமாகத் தரப்படுவதன் காரணமாக கிராமப்புற மக்களிடையே குழப்பம் நிலவுவதாகச் செய்திகள் வருகின்றன.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒரே பணியாளர் வருகைப் பதிவேட்டின் கீழ், ஒரே இடத்தில், ஒன்றாக, குறிப்பிட்ட நாட்களுக்குப் பணியாற்றுவர்களுக்கு ஊதியம் ஒருசில பிரிவினருக்கு 15 முதல் 20 நாட்களுக்குள் அளிக்கப்படுவதாகவும், ஒருசில பிரிவினருக்கு இரண்டு மாதங்கள் வரை ஆகின்றன என்றும், இதனால் பணியாளர்களிடையே சந்தேகமும், கசப்புணர்வும் ஏற்படுகிறது என்றும், இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகள் அனைவருக்குமான ஊதியம் ஒன்றாகத்தான் சமர்ப்பிக்கப்படுகிறது என்றும், ஆனால் அதற்கான ஊதியம் பிரித்து கொடுப்பதாகவும், இந்தப் பிரச்சினை ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், பிஹார், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலவுவதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.
இதைப் தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சித் துறை மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்ததற்கு ஊதியம் மற்ற பிரிவினரைக் காட்டிலும் ஜூன் மாதத்தில் தாமதமாகக் கிடைத்ததாக ஏராளமான புகார்கள் வந்துஉள்ளது என்றார் எனப் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இது மிகவும் வருத்தம் அளிக்கும் செயல் ஆகும். இந்த நிலை தொடர்ந்தால், இதனால் ஏற்படும் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் மற்றும், சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாக அமைந்துவிடும் என்றார்.
ஒரே இடத்தில் ஒன்றாகப் பணி புரிந்தவர்களுக்கான ஊதியத்தை ஒரே சமயத்தில் வழங்குவது தான் இயற்கை நியதி, இந்த இயற்கை நியதியைப் பின்பற்றி ஊதியம் வழங்கப்படும்போது, பணிபுரிபவர்களிடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் சிறப்பாகப் பணியாற்றவும் வழிவகுக்கும். மாறாக, ஊதியத்தை ஒரு பிரிவினருக்கு முன்னதாகவும், மற்றொரு பிரிவினருக்குத் தாமதமாகவும் அளித்தால் பணிபுரிபவர்களிடையே மனக்கசப்பை உண்டாக்குவதோடு, தாமதமாக ஊதியம் பெறுபவர்களின் பணிபுரியும் ஆர்வமும் குறைந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்றுகூட தமிழ்நாடு முதல்வர், இத்திட்டத்தின் கீழ் நிலுவையாக உள்ள 1,178 கோடி ரூபாயை விடுவிக்குமாறு பிரதமருக்குக் கடிதம் எழுதினார். ஆனால், மத்திய அரசு தற்போது பின்பற்றி வரும் நடைமுறையில் உள்ள சாதக, பாதகங்களைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை எனவே, தமிழ்நாடு முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் வழங்க நடவடிக்கையை எடுத்து, அனைத்துப் பிரிவினரிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
தங்கத்தின் விலையில் கடும் சரிவு! 8300 ரூபாய் குறைந்துள்ளது!
5 சவரன் நகைக்கடன் யாருக்கெல்லாம் தள்ளுபடியாகும்- முழு விபரம் உள்ளே!
Share your comments