நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பேருந்துகள் மூலம் உதகையில் உள்ள முக்கியமான 5 சுற்றுலாத் தலங்களை சுற்றி பார்க்கலாம். கோடை சீசன் துவங்கியதை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்க்கு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நகரில் கடுமையான வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும், முக்கியமான சுற்றுலாத் தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று மகிழும் விதமாகவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலா பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
100 ரூபாய் கட்டணம்
சுற்றுலா பேருந்துகளானது, மத்திய பேருந்து நிலையம், தண்டர் வேர்ல்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பென்ஸ் மார்க் டீ மியூசிக், ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகிறது. இந்தப் பேருந்தில் ஒருமுறை டிக்கெட் கட்டணமாக பெரியவர்களுக்கு 100 ரூபாயும், சிறியவர்களுக்கு 50 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
இந்த பயணச் சீட்டை வைத்து நாள் முழுவதும் ஒவ்வொரு சுற்றுலாத் தளங்களுக்கும் சென்று சுற்றிப் பார்த்து விட்டு, மீண்டும் மற்றொரு பேருந்து ஏறி அடுத்த சுற்றுலாத் தளத்தை பார்த்து மகிழலாம்.
தொட்டபெட்டா மற்றும் ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை காண்பதற்கு அங்கு செல்லக் கூடிய பாதையானது மிகவும் குறுகலான பாதையாக இருப்பதால், இந்த இரண்டு சுற்றுலாத் தளங்களுக்கு மட்டும் சிறிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சுற்றுலாப் பேருந்துகள் தங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க
இனி வாட்ஸ்அப்பில் மின்கட்டணம் செலுத்தலாம்: மாநில அரசின் அருமையான முயற்சி!
ஜூலை 1 முதல் இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது: திடீர் அறிவிப்பு!
Share your comments