1. செய்திகள்

விசைத்தறிக்கு 1000 யூனிட் , கைத்தறிக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்|மார்ச் 20 தமிழக பட்ஜெட்|100 நாள் வேலைத்திட்டம்

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan

1.விசைத்தறிக்கு 1000 யூனிட்.. கைத்தறிக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்- அரசாணை வெளியீடு

திமுக தனது தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 200 யூனிட் இலவச மின்சாரத்தை, மார்ச் 1 முதல் 300 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்திரவிட்டுள்ளார். இதைப்போல் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை, மார்ச் 1 முதல், 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்திரவிட்டுள்ளார். மேலும், 1000 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, யூனிட் ஒன்றுக்கு வெறும் 70 பைசா அளவே உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2. 100 நாள் வேலைத்திட்டம்: அரசின் புதிய அறிவிப்பு!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொருவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற உரிமை உண்டு என்று தெரிவித்து இருக்கிறது. கிராமங்கள் சார்ந்த சந்தேகங்கள் இருப்பின் ஊராட்சித் தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் குறுக்கீடு செய்தால் தாராளமாக மாவட்டத்தின் குறை தீர் அலுவலரிடம் முறையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. கடந்த 122 வருடத்தில் அதிக வெப்பம்: எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்!

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மார்ச் முதல் மே மாதமும் அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் பிப்ரவரி மாதத்தில் நிலவிய வானிலை நிலவரங்கள் குறித்து தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி மாதம் நிலவும் சராசரி அதிகபட்ச வெப்பநிலையை விட 1.73 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.

4. ஹோட்டலில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்போவதாகத் தகவல்!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. விலை ஏற்றத்தால் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் புதிய விலை சிலிண்டருக்கு 1,118.50 ரூபாயாகவும், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிகச் சிலிண்டர் ஒன்று 2,268 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. எனவே, சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதுடன், உணவகங்களிலும் உணவு பொருட்களின் விலை உயர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5. நிலக்கரி உற்பத்தியில் சாதனை படைத்துள்ள இந்தியா!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி குறித்த விவரங்களை மத்திய நிலக்கரி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 2022-23 நிதியாண்டின் ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 784.41 மில்லியன் டன்னை எட்டியுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்ட உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது 15.10 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

6.சிறந்த ஆன்லைன் விவசாயப் பத்திரிக்கைக்கான வைகா விருது: கிரிஷி ஜாக்ரனுக்கு கிடைத்தது!

கேரள அரசின் வேளாண்மைத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட வைகா 2023 இன் நிறைவு நிகழ்வில் வைகா ஊடக விருதுகள் வழங்கப்பட்டன. விவசாயிகளுக்கு சிறந்த வருவாயை உறுதி செய்யவும், மாநிலத்தின் விவசாயப் பொருட்களின் செயலாக்கம், மதிப்பு கூட்டல் மற்றும் பரப்புதல் துறைகளின் திறனினைப் பயன்படுத்தி, விவசாயத் துறைக்குப் பொதுத் தொழில்முனைவோரை ஈர்க்கவும் வேளாண்மைத் துறையால் தொடங்கப்பட்ட திட்டம்தான் 'வைகா' என்பதாகும். இதில் மாபெரும் விவசாயப் பத்திரிக்கையான கிரிஷி ஜாகரன் சிறந்த அறிக்கையிடலுக்கான ஆன்லைன் மீடியா விருதைப் பெற்றுள்ளது. மேலும், பத்திரிகை ஊடகமான மாத்ருபூமி மற்றும் ஜனயுகா விருது பெற்றன.

7.தர்மபுரியில் 21 நாட்கள் தொடர் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

தருமபுரி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனடிப்படையில், நல்லம்பள்ளி வட்டம், எர்ரப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி -2023 முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி மார்ச் 1 ஆம் தேதி துவக்கி வைத்தார். இந்த தடுப்பூசி முகாம் வருகிற 21 ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

8. தேயிலை துறை வளர்ச்சி குறித்து மத்திய அரசு நடவடிக்கை!

உலகளவில் சிறந்த அடையாளத்தை உருவாக்கும் வகையில் தேயிலைத் தொழில் துறையை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேயிலை உற்பத்தியில் உலகளவில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியா, உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தன்னிறைவு பெற்றுத் திகழ்வதுடன், ஏற்றுமதியிலும் சிறந்து விளங்குகிறது. தேயிலை ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா நான்காவது இடம் வகிக்கிறது. இந்தியத் தேயிலை தொழில் துறை 11 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன் ஏராளமானோருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.

9.ஆவின் பால் கூட்டுறவு சங்கத்திற்கு பால் சப்ளை நிறுத்தம் - பால் உற்பத்தியாளர்கள் முடிவு!

ஆவின் பால் கூட்டுறவு சங்கம் கொள்முதல் விலையை ரூ.35-ல் இருந்து 42 ஆக உயர்த்தாமல் விட்டாலோ, ஊக்கத்தொகையினை 7 ரூபாயாக வழங்காவிட்டாலோ மார்ச் 11 ஆம் தேதி முதல் பால் விற்பனையை நிறுத்த மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் வெண்மணி சந்திரன் கூறியபோது, தனியார் ஏஜென்சிகள், ஒரு லிட்டர் பாலை, 45க்கு கொள்முதல் செய்கின்றன, அதே நேரத்தில், ஆவின் சொசைட்டி கொள்முதல் விலை, சந்தை விலையை விட மிகவும் பின்தங்கி இருக்கிறது என்றும், பாலை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து அதிக விலைக்கு விற்க வேண்டும் என விவசாயிகள் பலர் சங்கங்களை வலியுறுத்தி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

10. ஒரு கிலோ வெங்காயம் ரூ.1200 க்கு விற்பனை!

இந்தியாவைப் பொறுத்தவரையில் வெங்காயம் என்பது ஒரு அத்தியாவசியமான உணவுக்குப் பயன்படுத்தக்கூடிய காய்கறி ஆகும். வெங்காயம் இல்லாமல் கிட்டத்தட்ட எந்த உணவையும் தயார் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டில் வெங்காயத்தின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 1200 எனவிற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இது கோழி இறைச்சியை விட அதிக விலை என்றும் கூறப்படுகிறது. வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களாகப் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உயர்ந்து கொண்டே வந்த நிலையில் தற்பொழுது பல்பொருள் அங்காடிகளில் ஒரு கிலோ வெங்காயம் இந்திய ரூபாயில் ரூ.1200 வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

11. மார்ச் 20 தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு!

தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வருகின்ற மார்ச் 20-ம் தேதி சட்டமன்றத்தில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2023-24- ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். மேலும் எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்பதை அலுவல் குழு முடிவு செய்யும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

12. தோல் அம்மை நோயினால் தொழில் பாதிப்பு- தர்மபுரி மாவட்ட விவசாயிகள் வேதனை

தர்மபுரி மாவட்டத்தில் கால்நடை வியாபாரம் மற்றும் பால்பண்ணை தொழிலை பாதித்துள்ள தோல் அம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணியை கால்நடை பராமரிப்புத்துறை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், தர்மபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கைகால்வாய் நோயிற்கான தடுப்பூசிகளை வழங்குவதற்காக மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் தடுப்பூசி இயக்கம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. FMD தடுப்பூசி இயக்கத்தை விவசாயிகள் வரவேற்கும் அதே வேளையில், கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் அம்மை நோயினை கட்டுப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

13. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் தாட்கோ திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

சென்னை மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேசன் கூட்ட அரங்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் தாட்கோ திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தாட்கோ கட்டுமான பிரிவு துறையால் கட்டப்பட்டு வரும் பள்ளிகள், விடுதிகள், நவீன சமுதாயக் கூடங்களின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், ஒன்றிய அரசு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் செயற்பொறியாளர்களுக்கு அமைச்சர் வலியுறுத்தினார்.

14.உளுந்து, பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு நேரடி கொள்முதல்!

உளுந்து, பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து அரசு நேரடிக் கொள்முதல் செய்யவுள்ளது. பயறு விவசாயிகள் பயன்பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் வேண்டுகோள்.

15. ஹால்மார்க் அடையாளம் இல்லாத தங்க நகைகள் விற்பனை கிடையாது

ஹால்மார்க் அடையாளம் இல்லாத தங்க நகைகள் விற்பனை செய்ய மார்ச் 31க்குப் பிறகு அனுமதி கிடையாது என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாடிக்கையாளர்கள் நலன் கருதி ஏப்ரல் 1 முதல் hallmark முத்திரை பதித்த தங்கம் மட்டுமே அணைத்து இடங்களிலும் விற்பனை என மத்திய அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு கைக்கொடுக்குமா Flipkart நிறுவனத்தின் ”Samarth Krishi” திட்டம் ?

அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் கண்காட்சி- எங்கே ? எப்போ?

English Summary: 1000 units for power looms, 300 units for handlooms free electricity|March 20 Tamil Nadu budget|100 day program Published on: 05 March 2023, 04:37 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.