ரேஷன் கடைகளில் நடுத்தர மற்றும் ஏழை, எளிய குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய வசதிகளை தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது. மேலும் டிஜிட்டல் முறையில் குடும்ப அட்டைகள், கைரேகை பதிவு உள்ளிட்ட அம்சங்களும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் விழுப்புரத்தில் நேற்று கூட்டுறவு வங்கி உறுப்பினர்களுக்கு வங்கி கடனுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
புதிய வசதிகள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் 1,254 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஆவின் உடன் கூட்டுறவுத்துறை இணைந்து ஆவின் பொருட்கள் விற்பனையகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை விற்பனை செய்யவும் முடிவு செய்திருக்கிறோம். இதுதவிர UPI எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு சேவையை தொடங்க உள்ளோம். இவை மே மாதம் 10ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வரப்படும்.
அதன்பிறகு PhonePe, GPay, Paytm ஆகியவற்றை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் வாடிக்கையாளர்கள் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். மேலும் பேசுகையில், நகைக் கடன் தள்ளுபடியில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்து கிட்டத்தட்ட 13 லட்சம் குடும்பங்கள் 4 ஆயிரத்து 818 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை வாங்கிச் சென்றுள்ளனர். விவசாயிகளுக்கு பயிர்க் கடன் சராசரியாக 6,000 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகளில் சராசரியாக 12,500 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 784 புதிய நியாய விலைக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகளை கண்காணிக்க முக்கிய பங்காற்றி வருகிறோம். முழுமையாக கணினி மயமாக்கப்பட்டால் முறைகேடுகளை தடுக்கலாம். 812 கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. அவற்றின் 385 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை ஏலம் விட்டு பணத்தை வசூல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்று சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
மேலும் படிக்க
மூத்த குடிமக்களுக்கு சிறந்த வசதி அறிமுகம்: இனி மொபைல் இருந்தால் போதும்!
Share your comments