மகா சிவராத்திரியின் போது வெள்ளியங்கிரி மலையில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வனத்துறை சார்பில் டெபாசிட் தொகை வசூலிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு, கால நிலை மாற்றங்களால் இயற்கை பேரிடர் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. திடக்கழிவு மேலாண்மையில் போதிய விழிப்புணர்வு இல்லாததும் இதற்கு ஒருவகை காரணமாக உள்ளன. அதிலும், குறிப்பாக மலைச்சார்ந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள், மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வீசி எறியும் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை விளைவிக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பிலும், வனத்துறை, நீதிமன்றம் சார்பிலும் பல்வேறு உத்தரவுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. பெரும்பாலான சிவன் ஆலயங்களில் சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல சிவராத்திரி போன்ற தினங்களில் அனுமதி வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு மலையேற்றத்திற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. சுமார் 1 லட்சம் பக்தர்கள் மலையேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
200 வனத்துறை அதிகாரிகள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனடிப்படையில், பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 20 ரூபாய் டெபாசிட் தொகையாக வனத்துறையினர் வசூலித்து, அதில் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர்.
தரிசனம் முடிந்து மலையடிவாரத்துக்குத் திரும்பும் போது மலையடிவாரத்தில் உள்ள தற்காலிக சேகரிப்பு மையத்தில் பக்தர்கள் காலி பிளாஸ்டிக் பாட்டிலைக் கொடுத்து வைப்புத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் வரும் ஆண்டுகளிலிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மலைப்பகுதிகளிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றினை பிறப்பித்து இருந்தது. மலைப்பகுதிகளிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுப்பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று, காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்க ஆணையிட்டு இருந்தது.
தமிழ்நாடு முழுவதும் மலைப்பகுதிகளில் உள்ள 163 கடைகளில் இந்த உத்தரவை அமல்படுத்திய தமிழக அரசு அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் கண்டது. சமீபத்தில் இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு பாராட்டு தெரிவித்த நிலையில், திட்டத்தை கோவை, பெரம்பலூர் பகுதியிலும் விரிவுப்படுத்த உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :
வேலூரில் மினி டைடல் பார்க்- ஓலா நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
100 நாள் வேலை உறுதித்திட்டம் பலிகடா-எம்பி ராகுல் காந்தி கண்டனம்
Share your comments