நெல்மணிகளைப் பாதுகாக்க 122.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.32 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 6 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் மற்றும் 40 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் கட்டுமானப் பணிகளைத் துவக்கிட அனுமதி ஆணை அளித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பான அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ள தகவல் பின்வருமாறு- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான இன்றியமையாப் பொருள்களைக் கொள்முதல் செய்து, சேமித்து வழங்கும் பணிகளோடு நெல் கொள்முதல் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது.
நெல் கொள்முதலின் போது ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்று முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டு 238 கோடி ரூபாய் ஒதுக்கிக் கொடுத்ததால் 18 இடங்களில் 2,86,350 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. உணவு தானியங்களைச் சேமிக்க 12 வட்டங்களில் 28 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 கிடங்குகள் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டுள்ளன.
நபார்டு வங்கி நிதியுதவி:
இதன் அடுத்த கட்டமாக, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் 65,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புக் கிடங்குகள் கட்ட 45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய டெல்டா அல்லாத மாவட்டங்களில் 52,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புக் கிடங்குகள் கட்ட 50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உணவுப் பொருள்களின் சேமிப்புக் கொள்ளளவினை அதிகப்படுத்துவதற்காக மொத்தம் 6,500 மெட்ரிக் டன் கொள்ளளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் இராமகிருஷ்ணராஜபேட்டையிலும், மதுரை மாவட்டத்தில் மதுரை மேற்கிலும், விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டையிலும் 3 புதிய சேமிப்புக் கிடங்குகள் கட்ட 12 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கும், காஞ்சிபுரம், மதுரை, நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மொத்தம் 8,500 மெ.டன் கொள்ளளவு கொண்ட மூன்று புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் கட்ட 15.5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கும், ஆக மொத்தம் 122.5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு முதலமைச்சரின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டம் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தால் 1.32 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் சேமிக்கப்படுவதோடு, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, நீலகிரி மற்றும் விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள சுமார் 10.5 இலட்சம் எண்ணிக்கையிலான நெல் விவசாயிகளும் பயனடைவதோடு நெல்லும் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும் என அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் காண்க:
Pig farming- அசோலாவுடன் பன்றி வளர்ப்பில் மாஸ் காட்டும் சிறுமி
தக்காளியை மிஞ்சும் வெங்காயம் விலை- பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
Share your comments