இந்நாட்களில் விதைகள் மற்றும் உரங்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், பிரதமர் கிசான் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அரசிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தொகை உயர்த்தப்படவில்லை. பிரதமர் கிசான் 13வது தவணையை ஜனவரி 14ஆம் தேதி மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்கிறது. இந்த பட்ஜெட் குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மத்திய அரசு சில ஆச்சரியங்களை அளிக்கலாம் என கூறப்படுகிறது. முக்கியமாக PM Kisan பயனாளிகளுக்கு மூன்று தவணைகளில் வழங்கப்பட்ட தொகை இப்போது நான்கு தவணைகளில் வழங்கப்படும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.6,000 கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2,மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான கலால் வரி குறைக்கப்பட்ட பிறகு, பெட்ரோலியப் பொருட்களின் விலை பெரிய அளவில் குறைந்து காணப்பட்டது. ஆனாலும், அடுத்தடுத்து வந்த நாட்களில் விலை உயர்வு ஆரம்பமாகியது. இந்த வாரத்தின் முதல் நாளான இன்றும் விலையேற்றப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் 102.65 ரூபாய் எனும் அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.102.63 ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 2 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3,மீன் விலை கிடுகிடு உயர்வு
மாட்டுப்பொங்கல் திருநாளை ஒட்டி முன்னோர்களுக்கு பிடித்த அசைவ உணவு வகைகள் படைத்து வழிபாடு நடத்த மீன்பிடி துறைமுகங்களில் ஏராளமான பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.
மீன்களின் விலையும் மிகவும் அதிகரித்துள்ளது.வழக்கமாக 550 முதல் 800க்கு விற்பனையான வஞ்சிரம் தற்பொழுது ரூ. 1000-த்திற்கும், சீலா ரூ.400-க்கும், துள்ளு கெண்டை ரூ250-க்கும், நெத்திலி மீன் ரூ.200-க்கும், இரால் ரூ350க்கும் விற்பனையாகி வருகிறது.
4,தமிழகத்தில் உச்சத்தை தொட்ட மல்லிகைப் பூ விலை
மல்லிகை பூ, பிச்சிப் பூ ஆகிய பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். தற்போது குண்டுமல்லி சீசன் இல்லாத காரணத்தால் மல்லிகைப் பூவின் விலை உச்சத்தை தொட்டு உள்ளது.
மல்லிகை பூ கிலோ 4,500 ரூபாய்க்கும், முல்லை அரும்பு கிலோ 2,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சாமந்தி, கேந்தி பூ, கோழி கொண்டை பூ போன்றவைகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
5,அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தினாலும் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு என்று தனிச்சிறப்புகள் உள்ளது. மதுரையில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்போதும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தை முதல் நாளில் அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் தினத்தில் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சீறும், சிறப்புமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 1000காளைகளும் 350 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
6,தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது!
தங்கம் விலையில் தொடரும் அதிகரிப்பு, அதனை நடுத்தரவாசிகளுக்கு எட்டாக்கனியாகவே மாற்றிவிடுகிறது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கம் விலை நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் புதிய உச்சத்தை எட்டியிருப்பது, இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று ரூ.42,368 யைத் தாண்டி புதிய உச்சம் அடைந்துள்ளது. இதனால் திருமண ஏற்பாடு செய்திருப்பவர்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
7,வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டம்
ஆதரவற்ற,கைவிடப்பட்ட மற்றும் காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள்,பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள்,பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு 20 கோடி ருபாய் ஒதுக்கீட்டில் "வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்" திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்
8,வட இந்தியாவில் கடுங்குளிர்
வட இந்தியாவின் பல பகுதிகளில் குளிர் அதிகரித்து மக்கள் நடுங்கி வருகின்றனர். வட இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் குளிர்ந்த காற்று அதிகரித்துள்ளது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. குளிர் காலநிலை அதிகரித்து வருவதால், பஞ்சாப், ஹரியானா, டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் தொடர வாய்ப்புள்ளது. திங்கள்கிழமை காலை முதல் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லியின் பல பகுதிகளில் கடுமையான குளிர் காற்று வீசி வருகிறது. இது ஜனவரி 18 வரை தொடரும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 2 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இமயமலையின் மேற்குப் பகுதியில் இருந்து குளிர்ந்த காற்று வீசுவதால், வெப்பம் குறைந்து, அடுத்த மூன்று நாட்களுக்கு சமவெளிப் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீச வாய்ப்புள்ளது.
9,டாப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பை விரிவுபடுத்த திட்டம்
வானிலை உச்சநிலையை மிகவும் துல்லியமாக கணிக்க 2025 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் டாப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். டெல்லியில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 148வது நிறுவன தினத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பேசினார். இந்திய வானிலை ஆய்வு மையம் 2025ஆம் ஆண்டுக்குள் 660 மாவட்ட வேளாண் வானிலை ஆய்வு அலகுகளை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு தீவிர வானிலை நிகழ்வுகளை இது கணித்துள்ளது. நமது தேசிய நுகர்வு தவிர, நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் வழங்கப்படுகிறது, என்று அவர் விளக்கினார்.
10,வானிலை அறிக்கை
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ கூடும்.
ஓரிரு இடங்களில் அதிகாலை வேலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க:
Share your comments