தர்மபுரியை சேர்ந்த 61 வயதான ஓய்வுப்பெற்ற ஆசிரியர் ஒருவர் நீட் தேர்வில் வெற்றிப்பெற்று, மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க வந்துள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவப் படிப்பில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினர் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று நடந்தது. இதில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், 71 எம்.பி.பி.எஸ்., - இரண்டு பி.டி.எஸ்., என, 73 இடங்கள் நிரம்பியுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு, இன்று (ஜன.,28) கவுன்சிலிங் துவங்கியது.
கவுன்சிலிங் (Counseling)
இன்றும், நாளையும், 436 எம்.பி.பி.எஸ்., - 97 பி.டி.எஸ்., என, 533 இடங்களுக்கு, கவுன்சிலிங் நடைபெறுகிறது. இதில் 61 வயதான ஓய்வுப்பெற்ற ஆசிரியர் ஒருவரும் பங்கேற்றுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தர்மபுரியை சேர்ந்த 61 வயதான சிவபிரகாசம் என்பவர், ஓய்வுப்பெற்றாலும், அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி அளித்து வருகிறார். இவர் கடந்தாண்டு நடந்த நீட் தேர்வு எழுதி வெற்றியும் பெற்று அசத்தியுள்ளார். இதனையடுத்து அவர் இன்றைய கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளார்.
விட்டுக்கொடுத்தார்
அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிவபிரகாசம் 249வது இடத்தில் இருப்பதால், அவருக்கு மருத்துவ இடம் எளிதாக கிடைக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், ஆசிரியர் சிவப்பிரகாசம் கவுன்சிலிங்கில் எம்.பி.பி.எஸ் சீட்டை விட்டுக்கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பு படித்துவரும் சிவப்பிரகாசத்தின் மகன், தான் மருத்துவரானால் 10 முதல் 15 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும் எனவும், இதுவே இளம் மாணவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால், 40 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவராக பணியாற்ற முடியும் என்றும் கூறி தனது தந்தையை கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
தன்னால் ஒரு மாணவரின் வாய்ப்பு பறிபோய் விடுமோ என எண்ணிய சிவப்பிரகாசம், கவுன்சிலிங்கில் எந்த கல்லூரியையும் தேர்வு செய்யாமல் எம்.பி.பி.எஸ்., சீட்டை விட்டுக்கொடுத்தார்.
மேலும் படிக்க
Share your comments