1. செய்திகள்

தென் மாவட்ட மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரயில்வே வாரியம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
A good news for southern TN districts announced by railway

தென் தமிழகத்தை மையமாக வைத்து நீண்டகாலமாக நிலுவையில் இருந்த ரயில் சேவை தொடர்பான கோரிக்கைகளுக்கு ரயில்வே வாரியம் அடுத்தடுத்து ஒப்புதல் அளித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒப்புதல் வழங்கப்பட்ட கோரிக்கைகளில் பாதி மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை எழும்பூர்-திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவை உட்பட தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆகஸ்ட் 16 தேதியிட்ட ரயில்வே வாரிய அறிவிப்பின் முழு விவரம் பின்வருமாறு-

பாலக்காடு-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படும். திருவனந்தபுரம்-மதுரை இடையேயான அமிர்தா எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்கும் திட்டம் 2019-ல் முன்வைக்கப்பட்டது. புதிய பாம்பன் பாலம் கட்டும் பணி இன்னும் நடந்து கொண்டிருக்கும் போதே, அமிர்தா எக்ஸ்பிரஸ் சில மாதங்களுக்கு மண்டபம் ஸ்டேஷனில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாலருவி எக்ஸ்பிரஸ் நீட்டிப்பு, தூத்துக்குடி வாசிகளுக்கு கேரளாவிற்கு நேரடி ரயில் இணைப்பை வழங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இருவார விரைவு ரயில் மற்றும் கொல்லம்-திருப்பதி இருவார விரைவு ரயில்களுக்கு ரயில்வே வாரியம் பச்சை சிக்னல் கொடுத்துள்ளது. இருவார ரயில் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வேளாங்கண்ணியை வந்தடையும். செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரயில்கள் கோட்டயம், திருவல்லா, கொல்லம், செங்கோட்டை, சிவகாசி, விருதுநகர், காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக இயக்கப்படும்.

கொல்லம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கொல்லத்திலிருந்தும், திருப்பதியில் இருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் இயக்கப்படும். இது சித்தூர், காட்பாடி, சேலம், ஈரோடு, ஆலுவா, காயம்குளம் வழியாக செல்லும்.

பயணிகள் ரயில்- எக்ஸ்பிரஸ் ரயிலாக ஒன்றிணைப்பு:

மயிலாடுதுறை-திருச்சி, திருச்சி-கரூர் மற்றும் கரூர்-சேலம் ஆகிய மூன்று பயணிகள் ரயில்களை ஒன்றிணைத்து மயிலாடுதுறையில் இருந்து சேலத்திற்கு ஒரே எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றும் திட்டத்திற்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1.45 மணிக்கு சேலம் வந்தடையும். மீண்டும் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.

புனலூர் - குருவாயூர் விரைவு ரயிலை மதுரை - செங்கோட்டை பாசஞ்சர் மற்றும் செங்கோட்டை - கொல்லம் விரைவு ரயிலுடன் இணைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனி மதுரையில் இருந்து செங்கோட்டை, புனலூர் வழியாக குருவாயூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் சேவையாக இயக்கப்படும். நீட்டிப்பு மற்றும் புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இப்பணிகள் நிறைவடையும் பட்சத்தில் விரைவில் இந்த சேவையும் தொடங்கப்படும்" என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

உங்க நகம் இந்த மாதிரி இருக்கா? அப்போ பிரச்சினை இருக்கலாம்

சிம் கார்டு வாங்கும் விதியில் புதிய மாற்றம்- ஒன்றிய அமைச்சர்!

English Summary: A good news for southern TN districts announced by railway Published on: 19 August 2023, 09:41 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.