ஆவின் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் வெளியாகின்றன. ஆவின் பால் கொள்முதல் குறைந்துவருவதால் வெண்ணெய் மற்றும் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
ஆவின் நெய் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஆவின் நிர்வாகமும், அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலதரப்பிலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய் , பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஆவின் 1 லிட்டர் ப்ரீமியம் நெய் ரூ.630 லிருந்து ரூ.680 ஆகவும், அரை லிட்டர் நெய் ரூ.340 லிருந்து ரூ.365 ஆகவும் ஆவின் நிர்வாகம் உயர்த்தி இருந்தது. டிசம்பர் 16ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது மாதங்களில் மூன்றாவது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருந்தது.
விலை உயர்வு ஒரு பக்கம் இருப்பினும் நெய், வெண்ணெய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. கடந்த தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு ஆவின் நெய் அதிக அளவில் தேவைப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு பாலகங்கள் வைத்து நடத்தும் பால் முகவர்களுக்கு போதிய அளவு ஆவின் நெய் வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டு வருகின்றது.
தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகையை முன்வைத்து மக்கள் அதிகளவில் நெய் வாங்குவார்கள். ஆனால் தற்போது ஆவின் நெய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் தமிழக அரசு இதை சரி செய்ய வேண்டும் என்று பல கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மேலும் படிக்க
புதிய பயனர்கள் சேர்க்கப்பட்டால் மட்டுமே நிலையான போக்குவரத்து சாத்தியம்: ஆய்வில் தகவல்
Share your comments