1. செய்திகள்

இதையும் கவனத்தில் வச்சுக்கோங்க.. வேளாண் பட்ஜெட் குறித்து நடிகர் கார்த்தி அரசுக்கு கோரிக்கை

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Actor Karthi's request to the government regarding TN agriculture budget 2023

நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு நடிகர் கார்த்தி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் கருவிகள் குறித்து தமிழக அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தது முதலே வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த முறையினை போன்றே இந்த முறையும், வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். விவசாயிகளின் நலன் சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் வெளியிட்டார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி விவசாயிகளின் நலன் காக்க “உழவன் பவுண்டேஷன்” என்கிற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். விவசாயிகளுக்கு வேண்டிய நலத்திட்ட உதவிகள், அவர்களுக்கான வேளாண் துறை சார்ந்த விழிப்புணர்வினை தனது உழவன் பவுண்டேஷன் மூலம் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் குறித்து தனது கருத்தினை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம். வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர் நிலைகள் சீரமைப்பு மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது. இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது.

இதுப்போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால், அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண்க:

ஏன் இந்த துறைக்கெல்லாம் நிதி ஒதுக்கீடு குறைவு? கேள்விகளுக்கு விளக்கமளித்த தமிழக அரசு!

English Summary: Actor Karthi's request to the government regarding TN agriculture budget 2023 Published on: 22 March 2023, 04:24 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.