சோலார் மின்வேலி அமைக்க மானியம் அறிவிப்பு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இரண்டு நாள் பயிற்சி: விவசாயிகளுக்கு அழைப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாநாடு: கலந்துகொண்டார் மு.க. ஸ்டாலின், விவசாயப் பத்திரிக்கையான கிரிஷி ஜாக்ரனின் 26வது ஆண்டு பெருநாள்: கோலாகலக் கொண்டாட்டம், பிரதான் மந்திரி மாத்ஸ்ய சம்பதா யோஜனா-வின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டம், Agri Asia 2022 சர்வதேச வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி இன்றுடன் நிறைவு முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.
சோலார் மின்வேலி அமைக்க மானியம் அறிவிப்பு!
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில், மானியத்துடன், சோலார் மின்வேலி அமைக்க மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விவசாயிகள் வேளாண் பயிர்களைப் பாதுகாக்க மானியத்துடன் சோலார் மின்வேலி அமைக்கலாம் என தெரிவிக்கப்படடுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 ஹெக்டேர் பரப்பு அல்லது 566 மீட்டர் சூரிய மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும். சூரிய மின் வேலி அமைப்பதற்கான செலவு தொகையில் 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். 5 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க ரூ.2.8 லட்சமும், 7 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க ரூ.2.26 லட்சமும், 10 வரிசைகள் கொண்ட சூரியமின்வேலி அமைக்க ரூ.2.52 லட்சமும் என விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றபடி தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவிகப்பட்டுள்ளது. இதற்காக திருப்பூர் உடுமலை பகுதி விவசாயிகள், வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க வசதியாக, சோலார் மின் வேலி அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இரண்டு நாள் பயிற்சி: விவசாயிகளுக்கு அழைப்பு!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் நடைபெற இருக்கிறது. முருங்கை முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ், காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய் ஆகியன எளிய முறையில் தயாரிக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த இரு நாள் பயிற்சிகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் நடைபெற உள்ளன.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாநாடு: கலந்துகொண்டார் மு.க. ஸ்டாலின்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநாடு சென்னை தீவுத்திடலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். வாழ்வாதாரம் நம்பிக்கை என்ற கருத்தைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் தேசிய கல்வி கொள்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் பேசுகையில் கூட்டுறவு கடன் தள்ளுபடி, காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட உள்ளது முதலான நடைமுறை திட்டங்களைக் குறிப்பிட்டதோடு, பிற கோரிக்கைகள் இருப்பின் அமைச்சர்களிடம் நேரடியாக கோரிக்கை வைக்கலாம் எனவும் அவை விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் கூறியுள்ளார்.
விவசாயப் பத்திரிக்கையான கிரிஷி ஜாக்ரனின் 26வது ஆண்டு பெருநாள்: கோலாகலக் கொண்டாட்டம்!
மாபெரும் விவசாயப்பத்திரிக்கையான கிரிஷி ஜாக்ரனின் 26-ஆவது ஆண்டு கொண்டாட்டம் புதுதில்லியில் உள்ள மாபெரும் ஹோட்டலான சில்வர் ஓக்-இல் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு மாநில முக்கிய தலைவர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் முதலானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கிரிஷி ஜாக்ரனின் தலைமை ஆசிரியரும் நிறுவனருமான எம்.சி. டாம்னிக் தனது குடும்பத்துடன் கேக் வெட்டி அனைவர் முன்னிலையிலும் 26-ஆம் ஆண்டு பெருவிழாவைக் கொண்டாடினார். மேலும், இவ்விழாவில் கிரிஷி ஜாக்ரன் குழுவினர் கலந்துகொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான் மந்திரி மாத்ஸ்ய சம்பதா யோஜனா-வின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டம்!
PMMSY என்று அழைக்கப்படும் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) அதன் வெற்றிகரமாகத் தனது இரண்டாம் ஆண்டு நிறைவைப் பெற்றுள்ளது. PMMSY திட்டத்தின் சாதைனைகள் மற்றும் எதிர்காலத் திட்டமிடல்கள் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இந்த விழாவில் மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கலந்து கொண்டார். சுமார் 300 மீனவர்கள் மற்றும் விவசாயிகள், அனைத்து மாநிலங்களில் இருந்தும் உள்ள மூத்த அதிகார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வுக்கு கிரிஷி ஜாக்ரன் குழுவினர் மீடியா பாட்னராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Agri Asia 2022 சர்வதேச வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி இன்றுடன் நிறைவு!
குஜராத்தின் காந்திநகரில் செபடம்பர் 9-ஆம் தேதி தொடங்கிய Agri Asia 2022 சர்வதேச வேளாண் தொழில்நுட்ப மூன்று நாள் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. முன்னனி சர்வதேச விவசாயத் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கும், கையாள்வதற்கும், வெளி மற்றும் உள்நாட்டு பார்வையாளர்களை ஒருங்கிணைப்பதற்கும் இக்கண்காட்சி மிகுந்த துணை புரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
புதிய தொழில் தொடங்க 17.5 லட்சம் மானியக் கடன்: முக்கிய அறிவிப்பு!
Share your comments