இன்று நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிகத் திருவிழா 2023-யை தொடங்கி வைத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை-உழவர் மானியக் கோரிக்கையில், மாநில அளவில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான (Farmer Producer Organisation) கண்காட்சி சென்னையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் என்பவை வேளாண் தொழிலை அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கும், விவசாய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வணிகப்படுத்துதலுக்கும் அடித்தளமாக அமைந்து வருகின்றன.
வேளாண் வணிகத் திருவிழாவின் சிறப்பம்சங்கள்:
இன்று தொடங்கியுள்ள இவ்வேளாண் வணிகத் திருவிழாவில் 176 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 86 அரங்குகளில் 188 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருட்களும், 90 அரங்குகளில் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), நபார்டு வங்கி (NABARD), தொழில் முனைவோர்கள், பிற மாநிலங்களில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், வங்கிகள் போன்ற பல்வேறு அமைப்புகள் சார்ந்த கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வரங்குகளில் சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பனை சார்ந்த பொருட்கள், நறுமணப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பூக்கள், சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டப்பட்ட தின்பண்டங்கள், உடனடியாக சமைக்கும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விளைபொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு விருது:
இன்றைய நிகழ்வில் "ஆளுமையில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான விருதினை" புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், ஈரோடு கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும் முதல்வர் வழங்கினார்.
"வர்த்தகத்தில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான விருது" கடலூர் மாவட்டம், மங்களுர் தானியப் பயிர்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், சேலம் வீரபாண்டி களஞ்சிய ஜீவிதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, 2022-23ஆம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த விவசாயி ம.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு விருதும், இரண்டு இலட்சம் ரூபாய்க்கான பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
இன்றைய நிகழ்வினைத் தொடர்ந்து நாளை (9.07.2023) அறுவடைக்குப் பின் மேலாண்மை மற்றும் மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புகள், வெற்றிபெற்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடந்து வந்த பாதை, டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்குகளும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் பொருட்களின் விற்பனையினை எளிதாக்கும் வகையில், வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பும் (Buyers-Sellers Meet) நடைபெற உள்ளது.
இவ்வேளாண் வணிகத் திருவிழாவில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் காண்க:
மகளிர் உரிமைத் தொகை- கூட்டுக்குடும்பமாக வாழும் பெண்கள் அதிர்ச்சி
Share your comments