மீன் வளர்க்க ரூ. 1.2 லட்சம் மானியம் பெற அழைப்பு, விவசாயிகளுக்கு மின் மோட்டார் அமைக்க ரூ. 10,000 மானியம், 75 வது சுதந்திர தினம்: இந்திய, தமிழகக் கோட்டைகளில் கொடியேற்றம், ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை, பாரம்பரிய நெல் வகைகளைச் சேகரித்த பெண்ணுக்கு விருது மற்றும் கரும்புக்கு ஆதாரவிலையாக ரூ. 252 கோடி ஒதுக்கிய தமிழக அரசு முதலான வேளாண் செய்திகளை இப்பதிவு தொகுத்து வழங்குகிறது.
மீன் வளர்க்க ரூ. 1.2 லட்சம் மானியம் பெற அழைப்பு!
கிராமங்களில் பண்ணைக்குட்டை அமைத்து மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு 18,000 முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. பிரதமர் மீன் வள மேம்பாட்டுத்திட்டம் 2021- 22ம் ஆண்டு திட்டத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க, பல்நோக்குப் பண்ணை குட்டையில் மீன் வளர்ப்போருக்கு அரசு ஒரு யூனிட்டுக்கு 18 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் மானியம் வழங்குகிறது. பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 60 சதவீதம் மானியம், உயிர் மீன் விற்பனை மையங்கள் அமைக்க 40 சதவீதம் மானியம், குளிர் காப்பிடப்பட்ட வாகனங்கள் வாங்க, பொதுப்பிரிவுக்கு 40 சதவீதம் மானியம் ஆகியவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைக்க, பொதுப்பிரிவுக்கு 40 சதவீதம் மானியமும், பெண்களுக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
விவசாயிகளுக்கு மின் மோட்டார் அமைக்க ரூ. 10,000 மானியம்!
புதிதாக மின் மோட்டார் பம்ப் பொருத்தவும், பழைய மின் மோட்டர்களை மாற்றவும் விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர், தாராபுரம், உடுமலை பகுதிகளில் விவசாயிகளுக்குப் புதிதாக மின் மோட்டார் பம்ப் பொருத்தவும், பழைய மின் மோட்டர்களை மாற்றவும் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பயன் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதியதாகப் பொருத்தவும் ரூ.10,000 மானியம் வழங்கப்பட இருக்கிறது.
75 வது சுதந்திர தினம்: இந்திய, தமிழகக் கோட்டைகளில் கொடியேற்றம்!
நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். பிரதமர் மோடி தேசிய கொடியேற்றியபோது வானில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. இந்நிகழ்வைத் தொடர்ந்து அவரின் சுதந்திரதின உரையுடன் செங்கோட்டையில் நிகழ்வு நிறைவுற்றது. தமிழகத்தில் அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். இவர் பதவியேற்று 2-வது ஆண்டாகக் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!
ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் சில பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்குத் தகுதியாக B.V.Sc., மற்றும் A.H பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது குறிப்புகள், சான்றிதழ்களுடன் வரும் ஆகஸ்டு 30 அன்று காலை 11 மணிக்கு திருப்பூர், ஆவின் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய நெல் வகைகளைச் சேகரித்த பெண்ணுக்கு விருது!
பாரம்பரிய நெல் வகைகளைச் சேகரிப்பு செய்த பெண்ணுக்குத் தமிழக அரசு விருது அறிவித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி, சரவணகுமார் தம்பதியர் நாட்டின் பல மாநிலங்களுக்குச் சென்று மருத்துவக் குணம் கொண்ட பாரம்பரிய 1525 வகையான நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளனர். தனக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து அதனை அறுவடை செய்து பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரும்புக்கு ஆதாரவிலையாக ரூ. 252 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!
தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கான நியாயமான மற்றும் ஆதார விலையினை வழங்கவேண்டி ரூ. 252 கோடியினைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டி சர்க்கரை ஆலைகளுக்கு ரூ. 252 கோடி முன்பணமாக ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு இந்த தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் பயனடையும் வகையிலும், கரும்பு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: அரசு அறிவிப்பு!
Share your comments