தமிழகத்தின் உட்புறப்பகுதிகளில் வேளாண் மற்றும் விவசாயிகளின் நலன்சார்ந்து நடைப்பெற்ற மற்றும் நடைப்பெற உள்ள திட்டங்கள், நிகழ்வுகள், குறித்த தகவலை இப்பகுதியில் காணலாம்.
மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி: (புதுக்கோட்டை மாவட்டம்)
தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆவணத்தாங் கோட்டையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை,மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் ஆகியவற்றின் கீழ் நடைபெற்ற மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி நடைப்பெற்றது. இந்த கண்காட்சியினை தொடங்கி வைத்து உரையாற்றினார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். இதன்பின்னர் உழவர் பெருமக்களுடன் அமர்ந்து ஒன்றாக உணவருந்தினார்.
காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம்: (இராமநாதபுரம் மாவட்டம்)
இராமநாதபுரம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக குடிநீர் வழங்கிட ஏதுவாக உரிய விவரத்தை ஊராட்சி மன்றத் தலைவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்தார்.
மாபெரும் வேளாண் கண்காட்சி: (பெரம்பலூர் மாவட்டம்)
தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் வேளாண்மைக் கல்லூரி சார்பில் பெரம்பலூரில் முதன் முறையாக மாபெரும் வேளாண் கண்காட்சி வரும் மே 12,13,14 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. அனைத்து நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என கூறப்பட்டுள்ள நிலையில் மண், நீர் பரிசோதனை மற்றும் பயிர் பாதுகாப்பு ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் இடுபொருட்கள் வழங்கல்:
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், பசுவப்பட்டி ஊராட்சி, பூச்சுக்காட்டுவலசில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் தெளிப்பான்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
ஏரி புனரமைக்கும் பணி தொடக்கம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள நாகேந்திரன் ஏரி, தடிக்கல் ஏரி, மல்லிகார்ஜூன ஏரி, அடவங்கா ஏரி, பெத்த செருவு ஏரி, ஐவளநாயக்கன் ஏரி, லட்சுமி கவுண்டன் ஏரி மற்றும் சூளகிரி வட்டத்தில் உள்ள பண்ணப்பள்ளி ஏரி ஆகிய 8 ஏரியை ரூபாய் 13 கோடியே 75 இலட்சம் மதிப்பில் பழுது பார்த்து, புனரமைத்தல், மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பூமி பூஜை நடைப்பெற்றது. இதில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்றார்.
பயிர் ஆராய்ச்சி குறித்த திட்ட ஆய்வு கூட்டம்:
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற 26-வது வருடாந்திர வல்லுநர் விதை ஆய்வுக்கூட்டம் மற்றும் 38-வது வருடாந்திர அகில இந்திய ஒருங்கிணைந்த பயிர் ஆராய்ச்சித் திட்ட ஆய்வுக்கூட்டத்தில் அகில இந்திய அளவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
Share your comments