தமிழக சட்டப்பேரவையில் வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையினை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். அதில் நீர்நிலை பாதுகாப்பில் சிறந்து பணியாற்றும் 100 நபர்களுக்கு நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நடப்பாண்டிற்கான பொது பட்ஜெட்டினை நிதியமைச்சர் தாக்கல் செய்த நிலையில், துறை ரீதியாக மானியக் கோரிக்கையினை அமைச்சர்கள் தாக்கல் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று வனத்துறை மானியக் கோரிக்கையினை அமைச்சர் மதிவேந்தனும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையினை அமைச்சர் மெய்யநாதனும் தாக்கல் செய்தனர். துறை ரீதியாக பல்வேறு புதிய அறிவிப்புகளையும் அமைச்சர்கள் வெளியிட்டார்கள், அவற்றின் விவரம் பின்வருமாறு-
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் “சர்வதேச கடல் பசு பாதுகாப்பு மையம்” ரூ.15 கோடி செலவில் அமைக்கப்படும். சென்னை, பள்ளிக்கரணையில் ரூ.20 கோடியில் சதுப்பு நில பாதுகாப்புப் மையம் அமைக்கப்படும். மாணவர்கள், தாவரவியலாளர்கள், வல்லுநர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இதன் மூல பயன்பெறுவர் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமைச்சர் மதிவேந்தன்.
மேலும், ரூ.9.3 கோடியில் உலகப்புகழ் பெற்ற ராம்சார் தளமான “வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்” இயற்கை சூழலில் மெருகூட்டப்படும். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள கூந்தகுளம் பறவைகள் சரணாலயம் ஒருங்கிணைந்த சூழலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்றார். பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் சூழல் சுற்றுலாத் திறன் ரூ.3.7 கோடியில் மேம்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டத்திலுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் புனரமைக்கப்படும்.
நீர்நிலை பாதுகாப்பில் சிறந்து பணியாற்றும் 100 நபர்களுக்கு நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பாக பள்ளிகளில் செயல்படும் சூழல் மன்றங்கள், காலநிலை மன்றங்களாக புதுப்பித்து மாற்றியமைக்கப்படும். ரூ,10 கோடியில் உள்ளாட்சி நிறுவனங்களுக்கிடையே காலநிலை மாற்றத் தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பசுமை சவால் நிதி உருவாக்கப்படும். பொதுமக்கள் அதிகளவில் கூடும் மையங்களில் சூழலுக்குகந்த பழக்கவழக்கங்களை ஊக்குவிக்க ரூ.50 லட்சத்தில் “சூழலுக்குகந்த வாழ்வியல் சான்றிதழ்” வழங்கப்படும்.
காலநிலை மாற்றத்திற்கேற்ப வாழும் வகையில் அதிகளவில் இளம் மாணாக்கர்களைத் தயார்படுத்த 50 பள்ளிகளில், ரூ.3.7 கோடியில் பசுமைப் பள்ளிக்கூடம் திட்டம் விரிவுப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
Share your comments