கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அரசு அறிவிக்க வேண்டும் என எம்.பியும், பாமகவின் தலைவரான அன்புமணி ராமதாஸ் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் முழு விவரம் பின்வருமாறு-
சென்னையை ஒட்டியுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள நீர்நிலைகள் உள்ளிட்ட காரணங்களால் அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வலசை வந்து செல்லும் நிலையில், அந்தச் சூழலை சீர்கெடுக்கும் வகையிலான நிகழ்வுகள் அப்பகுதியில் பெருமளவில் நடந்து வருவது கவலையளிக்கிறது.
சென்னை மாவட்டமும், ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டமும் ஏரிகளுக்கு பெயர் பெற்றவை. நீர் நிறைந்த ஏரிகளும், அவற்றையொட்டிய தாவரங்கள் நிறைந்த பகுதிகளும் அப்பகுதிகளை பறவைகள் வாழிடமாக மாற்றியுள்ளன. இந்தச் சூழலுக்கு வலிமை சேர்க்கும் வகையில் கடலுடன் இணைந்திருக்கும் உப்பங்கழிகள், காப்புக்காடுகள் ஆகியவை கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியை பறவைகளுக்கு சொர்க்கபுரியாக மாற்றியிருக்கின்றன.
கைவிடப்பட்ட உப்பளங்கள் பகுதியில் குவியும் பறவைகள்:
முட்டுக்காட்டில் தொடங்கி கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும், பழைய மாமல்லபுரம் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி கேளம்பாக்கம் உப்பங்கழி என்றழைக்கப்படுகிறது. கைவிடப்பட்ட உப்பளங்கள் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் பொரி மீன்கொத்தி, சாம்பல் கூழைக்கடா, நீர்க்காகம், சாதா உள்ளான், குளக்கொக்கு, உப்புக் கொத்திகள், ஆலா (Pied Kingfisher, Spot-billed Pelicans, Cormorants, Common Sandpipers, Pond Herons , Plovers, Terns)உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்து செல்கின்றன.
சதுப்பு நிலங்களை தேடிவரும் பறவைகள் பட்டியல்:
பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அதையொட்டிய பெரும்பாக்கம் சதுப்பு நிலம் ஆகியவை பறவைகளுக்கு பெரும் வரம் ஆகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது;
ஒரு பகுதி குப்பை மேடாகி விட்டது என்றாலும் கூட அங்கு வெளிநாட்டு பறவைகள் வருவது குறையவில்லை. பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் சுற்றுச்சூழல் மாசு, ஒலி மாசு ஆகிய அனைத்து தீமைகளும் இருந்தாலும் கூட அவற்றை சகித்துக் கொண்டு யுரேஷியா கழுகு ஆந்தை, கோனமூக்கு உள்ளான், தட்டைவாயன் வாத்து, நாமத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, கரண்டி வாயன், நீலத்தாழைக் கோழி, நைட் ஹெரான், நீர்க்காகம், நாமக்கோழி, மஞ்சள் குருகு, நெடுங்கால் உள்ளான் ஆகிய பறவைகள் அதிக அளவில் வந்து இந்த சதுப்பு நிலங்களுக்கு அழகும், பெருமையும் சேர்க்கின்றன.
சிறுதாவூர் ஏரியும், அதையொட்டியுள்ள காடுகளும் உலகப் பறவைகளை ஒவ்வொரு ஆண்டும் வரவேற்று விருந்து படைக்கின்றன. தோல்குருவி, சிவப்பு சில்லை, ரோஸ்ட்ராடுல்டே, பூனைப்பருந்து, களியன், குறுங்களியன் ஆகியவை இந்தப் பகுதிக்கு அதிகம் வந்து செல்லும் பறவைகள் ஆகும். அதேபோல், நன்மங்கலம் காப்புக்காடு பகுதியில் யுரேஷியா கழுகு ஆந்தைகள் அதிக அளவில் முகாமிடுவது வழக்கம். கோவளம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பெரிய சீழ்க்கை சிரவி, வர்ணம் பூசப்பட்ட நாரை, சாம்பல் கூழைக் கடா, நீர்க்காகம், பாம்பு பறவைகள், கருந்தலை அரிவாள் மூக்கன், பெரிய உள்ளான், காஸ்பியன் ஆலா ஆகிய வெளிநாட்டு பறவைகள் அணிவகுத்து வந்து செல்கின்றன.
கிழக்கு கடற்கரை பகுதியில் பிளமிங்கோ பறவைகள்:
இவை தவிர்த்து கிழக்குக் கடற்கரை சாலையின் அனைத்து பகுதிகளுக்கும் பிளமிங்கோ பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன. வேடந்தாங்கல் சரணாலயத்திற்குக் கூட செல்லாத பிளமிங்கோ பறவைகள் பத்தாயிரம் கிலோமீட்டருக்கும் அதிக தொலைவை கடந்து கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிக்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கதாகும். பறவைகள் வருகைக்கு ஏற்ற இந்த சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். பறவைகள் வந்து செல்லும் கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளில் கட்டுப்படுத்தப்படாத போக்குவரத்துக் காரணமாக மிகப்பெரிய அளவில் ஒலிமாசு ஏற்படுகிறது.
Read also: TN land survey- இணையதளத்தில் பட்டா மாறுதல் உட்பட இவ்வளவு வசதிகள் உள்ளதா?
ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையால் ஏற்படும் ஆபத்து:
கிழக்குக் கடற்கரை சாலைப்பகுதிகளில் செயல்படும் முறைப்படுத்தப்படாத கேளிக்கை விடுதிகளில் இரவு முழுவதும் நடத்தப்படும் கொண்டாட்டங்கள், இரைச்சல் மிகுந்த இசை நிகழ்ச்சிகள், பட்டாசு வெடிக்கும் நிகழ்வுகள் போன்றவை வெளிநாட்டு பறவைகளை அச்சுறுத்தி அங்கிருந்து விரட்டுகின்றன. இவற்றை அனுமதிப்பது பெரும் குற்றம் ஆகும். இவை அனைத்திற்கும் மேலாக கோவளம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை பறவைகளின் வருகைக்கு முற்றிலுமாக முடிவு கட்டிவிடும் ஆபத்து உள்ளது.
கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிக்கு வரும் பறவைகளை பாதுகாக்க இனியாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வேடந்தாங்கல் பகுதியில் நடைமுறை பயன்படுத்தப்படும் அனைத்து விதிகளையும் இங்கும் நடைமுறைப்படுத்தி, அங்கு மேற்கொள்ளப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலா, அமைதியையும், சூழலையும் கெடுக்கும் கொண்டாட்டங்கள், ஒலிமாசுவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என தனது செய்திக்குறிப்பில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read also:
உரம் கிடைப்பதில் பிரச்சினையா? புகார் எண் தெரிவித்த ஆட்சியர்
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொட்டு நீர்ப்பாசனம்- அரசுக்கு முன்மொழிவு
Share your comments