மக்காச்சோளம் பயிரில் குருத்துப்பூச்சியின் தாக்கம் அதிகரித்ததால் வேறு வழியின்றி பப்பாளி சாகுபடிக்கு பெருமளவில் தூத்துக்குடி விவசாயிகள் மாறி வருகின்றனர். பப்பாளி சாகுபடி கணிசமான லாபம் தரக்கூடியதாக இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏராளமான சிறு மற்றும் குறு தோட்டக்கலை விவசாயிகள் பப்பாளியில் உள்ள பல நன்மைகள் காரணமாக சோளப் பயிர்களிலிருந்து பப்பாளிக்கு மாறுவதில் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர் என்று கரிசல்பூமி விவசாய சங்கத்தின் தலைவர் வரதராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, இப்பகுதியில் சோளத்தை பயிரிடுவது விவசாயிகள் மத்தியில் பிரபலமான தேர்வாக இருந்தது. இருப்பினும், பயிர்களில் குருத்துப்பூச்சி எனப்படும் அமெரிக்கன் படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரித்து வந்தது விவசாயிகளின் பொறுமையை கடுமையாக சோதித்தது.
பயிர்களில் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பெருமளவில் முயற்சி செய்த போதிலும், பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை. இதனால், அறுவடையை முடித்து லாபம் பார்பது என்பது விவசாயிகள் மத்தியில் கடினமான சவாலாக மாறியது.
மேலும், மக்காச்சோளத்திற்கு அரசின் சார்பில் குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லை என்பதும் விவசாயிகளின் நிலையை மேலும் மோசமாக்கியது. தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பயிர்களை ஆய்வு செய்து, அவற்றைக் காப்பாற்றுவதற்கான வழிமுறைகளை வழங்கினாலும், மக்காச்சோளத்தின் விளைச்சல் நம்பிக்கை தரும் வகையில் இல்லை. இந்த நெருக்கடியான தருணத்தில், பல விவசாயிகள் சோளத்தில் இருந்து பப்பாளி சாகுபடிக்கு மாறினர்.
மாவட்டத்தில் முன்பு சுமார் ஐந்து லட்சம் ஹெக்டேரில் உளுந்து, பச்சைப்பயறு, கம்பு, சூரியகாந்தி, வெங்காயம், மக்காச்சோளம் மற்றும் இதர பிற பயிர்களை பயிரிட்டு வந்தனர். அதில் 30% விவசாய நிலம் முன்பு சோள விவசாயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என்றார்.
ஒரு ஏக்கர் நிலத்தில் 1,000 பப்பாளி மரக்கன்றுகளை நட்டிருப்பதாக மெட்டில்பட்டியில் விவசாயி ஒருவர் தனது வெற்றிக் கதையைப் பகிர்ந்து கொண்டார். மரக்கன்று நட்ட பத்தாவது மாதத்தில் பப்பாளி காய்ப்புக்கு வந்துவிடுகிறது. பப்பாளி விளைந்த காய் பருவத்தில் அதன் தோலினை கீறி சுரக்கும் பால் போன்ற நீரினை சேகரித்து வருகின்றோம்.
பால் கறந்த பிறகு, பழங்களைத் தனியாக விற்பனை செய்தும் வருகிறார். எவ்வாறாயினும், பிரித்தெடுக்கும் செயல்முறையை கவனமாகக் கையாள்வது மற்றும் சுமார் 12 மணி நேரத்திற்குள் குளிர்சாதனக் கிடங்கில் பால் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வது முக்கியம், என்றார்.
பப்பாளியின் பால் போன்ற நீர் பல்வேறு மருத்துவ தேவைகளுக்கும் மற்றும் முககீரிம் போன்ற அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் சந்தையில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பப்பாளி சாகுபடிக்கு பாசனத்திற்கு குறைந்த அளவு தண்ணீர் தான் தேவை. பாலின் விற்பனை தவிர்த்து பழங்களை ஜாம் மற்றும் பிற துணைப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தனித்தனியாக விற்கலாம். இது இப்பகுதி விவசாயிகள் மத்தியில் லாபம் ஈட்டக்கூடிய பயிராக பப்பாளி உருவெடுத்துள்ளது என தெரிவித்தார்.
pic courtesy: ugaoo
மேலும் காண்க:
5 லட்சம் மலர்களில் பொன்னியின் செல்வன் கப்பல்- வண்டியை ஏற்காடுக்கு விடுங்க..
Share your comments