சூலுார் பகுதியில் பல்வேறு திட்டங்களுக்காக தொடர்ந்து, விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்டது சின்னியம்பாளையம் ஊராட்சி. இந்த ஊரின் தெற்குப் பகுதியில் இருகூர் ரோட்டை ஒட்டியும், ஊரின் தென்மேற்கு பகுதியிலும் பல விவசாய நிலங்கள் உள்ளன. கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக, தென் மேற்கு பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு இழப்பீட்டு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாய நிலங்கள் (Farm Lands)
இந்நிலையில், மீண்டும், 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. உயர் அதிகாரிகள் குழுவும் இடங்களை ஆய்வு செய்ததால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், 'டிட்கோ' சார்பில், 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக அதிகாரிகள் குழுவினர், சின்னியம்பாளையம் பகுதியில் அமையவுள்ள விமான நிலைய ஓடுதளத்தை ஒட்டியுள்ள இடங்களை ஆய்வு செய்துள்ளனர். நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க தலைவர் பாபு தலைமையில் கோவை கலெக்டர் மற்றும் சூலுார் தாசில்தாரிடம் மனு அளித்துள்ளனர்.
விவசாயிகள் எதிர்ப்பு (Farmers Protest)
இதுகுறித்து சின்னியம்பாளையம் விவசாயிகள் கூறியதாவது: விமான நிலைய விரிவாக்கத்துக்காக, தெற்கு தோட்ட பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நிலங்களை கையகப்படுத்த மாட்டோம், என, உறுதி அளித்திருந்தனர். தற்போது மீண்டும் நிலம் கையகப்படுத்த ஆய்வு செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பல தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்து வருகிறோம். ஏற்கெனவே கொடுத்து விட்டோம்.
மீண்டும் கொடுங்கள் என்றால், எப்படி கொடுக்க முடியும். சுற்றி இருக்கும் நிலத்தை எல்லாம் கொடுத்து விட்டு, எங்கு போய் விவசாயம் செய்வது. அதனால், நிலம் கையகப்படுத்த இடம் கொடுக்கப்போவதில்லை என உறுதியாக உள்ளோம் என்று விவசாயிகள் கூறினர்.
மேலும் படிக்க
வேளாண் தொழிற்சாலை அமைக்க வேண்டும்: பா.ம.க., தலைவர் வேண்டுகோள்!
Share your comments