முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா இன்று(ஆகஸ்ட் 17) தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்குக் கோவிலின் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 4 மணியளவில் கொடிப்பட்டமானது வீதி உலா ஆகியவை நடைபெற்றது. மேலும், 5.40 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள செப்புக்கொடி மரத்தில் காப்பு கட்டிய அரிகரசுப்பிரமணிய பட்டர் கொடியினை ஏற்றினார். இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுக் காலை 7.05 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், கோவில் கண்காணிப்பாளர்கள் சீதாலெட்சுமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர். பின்னர் காலை 10.30 மணிக்கு உச்சிக் கால அபிஷேகம் நடைபெற்றது. இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது என்பது நினைவுக்கூறத்தக்கது.
5 -ஆம் திருவிழாவான 21 -ஆம் நாள் காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகின்றது. தொடர்ந்து பிற காலப் பூஜைகள் நடைபெறும். இரவு 7.30 மணியளவில் குடைவரை வாயில் தீபாராதனை நடக்கிறது. 7-ஆம் திருவிழா 23 ஆம் நாள் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தான்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் உருகு சட்டச் சேவை நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி முருகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா செல்ல இருக்கிறார். 8-ம் திருவிழாவில் நண்பகல் 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சுவாமி சண்முகர் பச்சை சாத்திக் கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது. 10 -ஆம் திருவிழாவான 26 ஆம் நாள் காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. 28 -ஆம் நாள் நடக்கும் 12-ம் திருவிழாவுடன் விழா நிறைவு பெற உள்ளது.
மேலும் படிக்க
Share your comments