இன்றைய தினம், தமிழர்களின் முதன்மை பண்டிகையான பொங்கல் திருவிழா கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கலின் மற்றொரு சிறப்பம்சமான தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிகட்டு போட்டி அவனியாபுரத்தில் இன்று தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சுமார் 1,000 காளைகள் மற்றும் 600 காளைகளை அடக்கும் வீரர்கள் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். இன்று நடைப்பெறும் ஜல்லிகட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரருக்கு கார்கள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரத்தினைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பாலமேடு பகுதியில் வருகிற ஜன.,16 ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜன.,17 ஆம் தேதியும் ஜல்லிகட்டுப் போட்டிகள் நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள்:
அவனியாப்புரத்தில் இன்று நடைப்பெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக தடுப்பு வேலிகள், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்ய, மதுரை மாநகராட்சி நிர்வாகம் 26 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. 18 தற்காலிக தொட்டிகளும், ஐந்து நடமாடும் கழிப்பறைகளும் அரங்கிற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன. சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக அவனியாபுரம் மாநகராட்சிப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பலத்த காயம் அடைந்தவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும் பல இடங்களில் மீட்புக் குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
4 சுற்று நிறைவில் யார் சிறந்த வீரர்?
ஜல்லிகட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பாக காளை மாடுகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் உட்பட அமைச்சர்கள், அரசு பிரதிநிதிகள் பலரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி வாசிக்க மற்றவர்கள் அதனை வழிமொழிந்தனர்.
தற்போது அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் 4 சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், 16 காளைகளை அடக்கி கார்த்திக் என்கிற வாலிபர் முதலிடத்தில் உள்ளார். அதனைத் தொடர்ந்து, ரஞ்சித் குமார் 14 காளைகள், முத்துகிருஷ்ணன் 07 காளைகளை அடக்கி அடுத்தடுத்து இடத்தில் உள்ளனர்.
அலப்பறை கொடுக்கும் வர்ணனையாளர்:
ஜல்லிக்கட்டு போட்டியின் ஒட்டுமொத்த சுவாரஸ்யமே, மாடுகளை அவிழ்த்து விடும் போது வர்ணனையாளர் பேசும் விதத்தில் தான் உள்ளது. அந்த வகையில், இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னர் உறுதிமொழி ஏற்பு நிறைவு செய்த போது, “தெறிக்கவிடலாமா” என அலப்பறை கொடுக்க ஆரம்பித்த வர்ணனையாளர் தற்போது வரை தனது நையாண்டி பேச்சினால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
இன்று மாலை அவனியாப்புரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெறும் நிலையில், சிறந்த மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல், இந்தாண்டும் ஜல்லிகட்டு போட்டிகளை காண பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
Read also:
பொங்கல் தினத்தன்று நகைப்பிரியர்களுக்கு ஷாக்- இன்றைய தங்கம் விலை?
பதக்கப்படி உட்பட 3184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Share your comments