கர்நாடகாவில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்டித்து பெங்களூருவில் இன்று (செப்டம்பர் 26) விவசாயிகள், கன்னட அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளதால், கர்நாடகா முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. தமிழக கர்நாடக எல்லையோரங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்களும் இன்று மூடப்படுகிறது. பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி தயானந்தா கூறுகையில், நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு போதிய மழையின்மையால், தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசும், விவசாயிகளும் தெரிவித்துள்ளது. காவிரி நீரினை மட்டுமே நம்பி குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத காரணத்தினால் பயிர்கள் கருகி அவதிப்படுகின்றனர். இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டதற்கு இணங்க நீரினை திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவித்தது.
அதற்கும் மறுப்பு தெரிவித்து இரு குழுக்களாக கர்நாடகவில் பந்த் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருக்குழுக்களில் ஒன்றான விவசாயி தலைவர் குருபுரு சாந்தகுமார் தலைமையில் இன்று பெங்களூரு பந்த் நடைப்பெறுகிறது. மற்றொரு குழுவான கர்நாடக ஆர்வலர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் செப்.29 ஆம் தேதி பந்த் நடைபெறுகிறது.
இரண்டு குழுக்களாக பந்த்:
காவிரி நதிநீர் பிரச்சனையில் இரு குழுக்களும் ஒருமித்த கருத்துக்கு வராததால், சொந்தமாக பந்த் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் இன்று பெங்களூரு பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், விவசாயிகளின் நிகழ்ச்சி நிரல் குறுகியதாக இருப்பதாகக் கூறி வாட்டாள் நாகராஜ், செப்டம்பர் 29 ஆம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் அடைக்கும் வகையில் "கர்நாடக பந்த்" நடத்த முடிவு செய்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்து வந்த பெரும்பாலான அமைப்புகள் தற்போது வெள்ளிக்கிழமை நடைபெறும் பந்த் போராட்டத்தில் கலந்து கொள்வதாக கூறி தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளன. இருப்பினும் கர்நாடக பாஜகவினர் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று பந்த் போராட்டத்தில் கலந்துக் கொள்வார்கள் என கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். கன்னட சார்பு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள செப்டம்பர் 29-ம் தேதி நடைபெறும் கர்நாடக பந்த்க்கு முழு ஆதரவு அளிப்பதாக ஓலா-உபர் ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இச்சங்கத்தினர் இன்று (செப்டம்பர் 26) பந்த்க்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கமும் பந்த் தொடர்பான குழப்பத்தை காரணம் காட்டி இன்று பந்த்-க்கான ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும், ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளை இயக்கும் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இன்றைய பந்த் அழைப்புக்கு தங்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளன. இன்று நடைப்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வரின் புகைப்படத்தினை ஒருதரப்பினர் அவமதித்துள்ளனர்.
மேலும் KSRTC ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழக (BMTC) ஊழியர்களை விடியற்காலை முதல் மாலை வரை பேருந்துகளை வெளியே கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இரு மாநிலத்திற்கு இடையேயான பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
இனி கடன் கிடைப்பது ஈஸியா? விவசாயிகளுக்காக 3 புதிய முன்னெடுப்பு
Share your comments