வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுத்தி விவசாயிகள் நடத்திய பாரத் பந்த் (Bharat Bandh) காரணமாக, தமிழகத்தில் மக்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுடன் மத்திய அரசு அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன. வேளாண் சட்டங்களை நீக்க வாய்ப்பில்லை என்றும், அதில் திருத்தங்கள் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம், விவசாயிகள் சார்பில் நடைபெற்றது. 11 மாநிலங்களில், இந்த முழுஅடைப்பு போராட்டம் பொதுவாக பெரிய அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, அமைதியாகவே நடந்து முடிந்தது.
விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்தன.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு அதரவாக தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன.
பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், முக்கிய சாலைகளைத் தடுத்து மறியலில் ஈடுபட்டனர். பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் உள்பட மாநிலத்திற்குள் இயக்கப்படும் பெரும்பாலான லாரிகளும் காலை 6 மணி முதல் ஓடவில்லை. இந்த லாரிகள் செட்களிலும், சாலையோரங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி , இரும்பு தளவாடங்கள், ஜவ்வரிசி, கல்மாவு, காய்கறிகள் தேக்கம் அடைந்தன. மேலும் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பருப்பு, வெங்காயம், பூண்டு, கோதுமை ஆகிய பொருட்களும் வரவில்லை. லாரிகள் நிறுத்தப்பட்டதால் ஒரு லாரிக்கு ரூ.2 ஆயிரத்திற்கு மேல் லாரி உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
விவசாயிகளின் பாரத் பந்துக்கு ஆதரவாக தமிழகத்தில் பல இடங்களில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் மறியல் போராட்டங்களும் நடத்தப்படடன.
ஆனால் மாநிலம் முழுவதும், போக்குவரத்து வழக்கம் போல் இயங்கின, கடைகள் , சந்தைகள் திறந்து இருந்தன. பாரத் பந்தால் தமிழகத்தில் பெரியளவில் பொதுமக்களுக்கு பாதிப்பும் இல்லை.
மேலும் படிக்க...
Share your comments