இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகளில் ஒன்றான கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவேக்சின் தடுப்பூசி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவர் பெயர் தீபக் மராவி வயது 42. போபாலில் உள்ள பீப்பிள்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 12-ந் தேதி நடந்த கோவேக்சின் பரிசோதனையின் போது அவரும் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
உயிரிழந்த தன்னார்வலர்
பின்பு வீடு திரும்பிய அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. வாயில் இருந்து நுரை வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் டாக்டரிடம் செல்லவில்லை. தடுப்பூசி போட்டு 10 நாட்கள் ஆகியிருந்த நிலையில், திடீரென அவரது உடல் நலம் மோசமானது. இதையடுத்து, அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது, வழியிலேயே உயிரிழந்து உள்ளார்.
பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், தன்னார்வலர் தடுப்பூசி சோதனைக்காக பதிவுசெய்த நேரத்தில், மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு பங்கேற்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதற்கான அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்திருந்தார். மேலும் தடுப்பூசி செலுத்தியத்திலிருந்து ஏழு நாட்கள் அவர் முழு கண்காணிப்பில் இருந்ததாகவும், அவர் ஆரோக்கியமாகவும், எந்தப் பின்விளைவுகளும் ஏற்படாமல் இருந்தார் என மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசியால் சாகவில்லை
தடுப்பூசி செலுத்தப்பட்டு பூர்வாங்க மதிப்பாய்வுகள் நடந்த ஒன்பது நாட்களுக்குப் பின்னர் தன்னார்வலர் காலமானதால், அவரது மரணம் தடுப்பூசி ஆய்விற்கும் சம்பந்தமில்லாதது என்பதை குறிப்பிட்டுள்ளனர். அவர், ஆய்வுக்கான தடுப்பூசியை எடுத்துக்கொண்டாரா அல்லது மருந்தற்ற ஊசி (placebo) எடுத்துக்கொண்டாரா என்பது குறித்த தகவல்கள் இல்லாததால் அவரது சந்தேக மரணத்தை உறுதிப்படுத்த முடியாது என்றும் பாரத் பயோடெக் மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதயம் செயலிழப்பு - போலீஸ் விசாரணை
போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, இறந்தவருக்கு இதயம் செயலிழந்திருப்பதாகவும், அது விஷத்தினால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என மருத்துவ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
உணவுப்பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி? எளிய டிப்ஸ்!
வேளாண் பொறியியல் கருவிகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு என்ன வாடகை? முழு விபரம் உள்ளே!
பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!
Share your comments