அம்பாசமுத்திரம் பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய உயிர்ப்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் உருவாக்க தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பூங்காவுடன் கூடிய உயிர்ப்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான முக்கிய நோக்கம் தென்மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதியில் உள்ள ஆசிய யானைகள் மற்றும் புலிகளின் எண்ணிக்கையை பராமரிப்பதே ஆகும் எனவும் அரசாணை குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 7 கோடி செலவில் களக்காடு முண்டந்துறை பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாணை தொடர்பான முழு விவரங்கள் பின்வருமாறு-
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அகஸ்தியமலை யானைகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய, உயிர்ப்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் (ம) வனத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
களக்காடு முண்டந்துரை புலிகள் காப்பகம் தமிழ்நாட்டில் 1976 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் புலிகள் காப்பகம் ஆகும். இதனை தொடர்ந்து, ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர்- மேகமலை புலிகள் என நான்கு புலிகள் காப்பகங்கள் என பின்னர் அறிவிப்பு செய்யப்பட்டன.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், 150 உள்ளூர் தாவரங்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட தாவரங்களின் தாயகமாகும். இந்த நிலப்பரப்பிலிருந்து 14 ஆறுகள் தோன்றுவதால் இப்புலிகள் காப்பகம் "நதிகள் சரணாலயம்" என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் தென்மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதியில் உள்ள ஆசிய யானைகளின் மிக முக்கியமான வாழ்விடங்கள் மற்றும் நடைபாதைகளை பாதுகாக்கும் நோக்கத்துடனும், யானைகளின் எண்ணிக்கையை பராமரிக்கும் நோக்கத்துடனும் அகஸ்தியமலை யானைகள் காப்பகம் இந்த அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு மையம் அகஸ்தியமலை யானைகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவற்றை பாதுகாக்கும் அரசின் முயற்சியில் ஒரு முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 7 கோடி செலவில் களக்காடு முண்டந்துறை பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் நிலையான சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மக்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் என அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க :
காலநிலை அபாயத்தை எதிர்கொள்ளும் 100 மாநிலங்களின் பட்டியல்-தமிழகத்திற்கு எந்த இடம்?
இனி அவ்வளவுதானா..Ola, Uber, Rapido நிறுவனங்களுக்கு செக் வைத்த டெல்லி அரசு
Share your comments