இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. மேலும், வரும் மே 1-ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் எனவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்தியாவில் தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மே 1ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கோவின் (CoWIN) வலைதளம், ஆரோக்ய சேது செயலி மூலமாக சனிக்கிழமை (ஏப்ரல் 24) முதல் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கு முன்பதிவு
சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான விலையை அந்நிறுவனம் வெளியிட்டது. அதன்படி, மாநில அரசுக்கு ஒரு டோஸ் ரூ.400 அளவிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 அளவிலும் விலை நிர்ணயம் செய்து வெளியிட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி (Covid Vaccine) செலுத்த விருப்பம் உள்ளவர்கள் கோவின் வலைதளம் அல்லது ஆரோக்ய சேது செயலி மூலமாக தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம். 18 வயதை கடந்தவர்களுக்கு கோவின் வலைதளத்தில் வரும் ஏப்.,24 (சனிக்கிழமை) முதல் தடுப்பூசிக்கு முன்பதிவு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பதிவு செய்து உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?
- கோவின் வலைத்தளத்திற்குச் சென்று, பதிவுசெய்க / உள்நுழைக என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அங்கு, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ததும், ஓடிபி.,யை (OTP) பெற்று குறிப்பிட்டுள்ள கட்டத்தில் அதனை உள்ளீடு செய்து சரிபார்ப்பு என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- தடுப்பூசிக்கான பதிவு பக்கத்தில், புகைப்பட அடையாள ஆதாரம், பெயர், பாலினம் மற்றும் பிறந்த ஆண்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்து, பதிவு என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- பதிவு செய்ததும், எப்போது தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளீர்கள் என்ற விருப்பத்தை கொடுக்க வேண்டும்.
- பிறகு உங்கள் பகுதி பின்கோடை உள்ளிட்டு தேடலை (search) அழுத்தவும். உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்கள் அதில் காண்பிக்கப்படும். அவற்றில், தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்து (confirm) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- ஒரு மொபைல் எண் பதிவு மூலமாக நான்கு பேர் வரை சேர்த்து ஒன்றாக பதிவு செய்யலாம்.
ஆரோக்ய சேது செயலியில் பதிவு செய்வது எப்படி?
- ஆரோக்ய சேது செயலின் முகப்புத் திரையில் கோவின் என்னும் பகுதியை தேர்ந்தெடுக்கவும்.
- அதில் தடுப்பூசி பதிவு என்பதை கிளிக் செய்து, மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஓடிபி.,யை பெற்று பதிவு செய்ய வேண்டும்.
- ஓடிபி சரிபார்ப்பு என்பதைக் கிளிக் செய்ததும், தடுப்பூசி பதிவு பக்கத்திற்கு செல்லும்.
- அவற்றில் மேலே கூறிய கோவின் வலைதளத்தில் பதிவு செய்யக்கூடிய செயல்முறையை பின்பற்றி தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்.
- ஒவ்வொருவரும் 2 டோஸ்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும். கோவாக்சின் தடுப்பூசி எனில், முதல் டோஸ் போட்டப்பிறகு 28 நாட்கள் முதல் 42 நாட்களுக்குள் இரண்டாவது டோஸ் போட வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி எனில், முதல் டோஸ் போட்டப்பிறகு 28 நாட்கள் முதல் 56 நாட்களுக்குள் இரண்டாவது டோஸ் போட வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தென்னையில் வாடல் நோய்! நோய் மேலாண்மை குறித்து வேளாண் அதிகாரி ஆலோசனை!
Share your comments