தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க, மாடுகளின் கொம்பில் சிவப்பு நிற பட்டை பொருத்தவும், கொம்புகளில் சிவப்பு நிற பிரதிபலிப்பு பெயிண்ட் தீட்டவும் உத்தரவிடக் கோரிய மனுவுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பெரும்பாலும் வாகன விபத்துகளுக்கு காரணங்களாக பட்டியலிடுபவை: அதிக வேகத்தில் வாகனத்தை இயக்குதல், மது அருந்தி வாகனம் இயக்குதல், சாலை விதிகளை மீறி இயக்குதல் போன்ற மனித தவறுகளை தாண்டி சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே பாயும் நாய் மற்றும் கால்நடைகளாலும் பெருமளவில் விபத்துகள் நடைபெறுவது அதிகரித்து உள்ளன.
இந்நிலையில் தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் என்பவர் பொதுநல மனுத்தாக்கல் ஒன்றினை செய்தார். அவரது மனுவில், நகர்மயமாக்கல், மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால், கால்நடைகள் உணவினை தேடி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரிவது அதிகரித்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் சாலைகளில் சுற்றித்திரிந்த பசு, எருமை மற்றும் நாய்களால் ஏற்பட்ட விபத்துகளினால் 2,000-க்கும் அதிகமான பொதுமக்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. மேலும் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் சாலைகளில் திரியும் கால்நடைகளை தெளிவாக பார்க்க முடியவில்லை.
இதுபோன்ற தருணங்களில் தான் விபத்துகளும் அதிகரிக்கின்றன. சாலையில் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ஆந்திரா, தெலங்கானாவில், நாய்கள், கால்நடைகளுக்கு பிரதிபலிக்கும் டேப்கள் பொருத்தி உள்ளனர். மற்ற மாநிலங்களைப்போல், தமிழகத்திலும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு சிவப்பு நிற பட்டைகளை பொருத்தும்படியும், மாடுகளின் கொம்புகளில் சிவப்பு நிற பிரதிபலிப்பு பெயிண்ட் தீட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு உத்தரவிட கோரியும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது விதிக்கப்படும் அபராதத்தொகையினை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவானது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜரானார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஒன்றிய சாலைப் போக்குவரத்து துறை, தமிழ்நாடு அரசு உள்துறை, நெடுஞ்சாலை துறை, நகராட்சி நிர்வாக துறைகள், 4 வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மேலும் காண்க:
திருவாரூரில் உள்ள நெல் சேமிப்பு நிலையத்திற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர்
அம்பாசமுத்திரம் பகுதியில் 7 கோடி மதிப்பில் உயிர்ப்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம்
Share your comments