அடுத்த வருடம் குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் (Cauvery water) கிடைக்கும்!
கர்நாடகா வழங்க வேண்டிய நிலுவை நீரின்அளவு 7.37 TMC-யாக குறைந்துள்ளதால், அடுத்தாண்டு குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
நீர் நிலுவை
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்க வேண்டிய நீர் அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி இம்மாதம் 1ம் தேதி நிலவரப்படி, 90.6 டி.எம்.சி., நீர் வழங்கப்பட்டது; 31.3 டி.எம்.சி., நீர் நிலுவை வைக்கப்பட்டது. இது குறித்து காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், தமிழக அரசு முறையீடு செய்தது. தமிழகத்திற்கு உரிய நீரை நிலுவையின்றி விடுவிக்க, கர்நாடகா அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீர் இருப்பு
இதைத்தொடர்ந்து, கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், தமிழகத்திற்கு அதிகளவில் நீர் திறக்கப்படுகிறது. இதனால், நிலுவை நீரின் அளவு 27ம் தேதி நிலவரப்படி, 7.37 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது. வரும் நாட்களில், இது முழுமையாக குறையும் என தெரிகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை (Mettur Dam) நீர் இருப்பும் 76.6 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து 564 கன அடி நீர்வரத்து நேற்று முன்தினம் கிடைத்தது. இதனால், நீர் இருப்பு மேலும் உயரும் வாய்ப்புள்ளது.
தற்போது, டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. வடகிழக்குபருவ மழை துவங்கி உள்ளதால், பாசன தேவை பூர்த்தியாகி வருகிறது. எனவே, மேட்டூர் அணையில் (Mettur Dam) உள்ள நீரை, முறைவைத்து திறந்தால், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் குறுவை பருவ பாசனத்திற்கும் திறக்க முடியும். அரசு உத்தரவின்படி இதற்கான பணிகளை, திருச்சி மண்டல நீர்வளத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 15 டன் வாழைப் பழங்கள் அழிப்பு!
நெற்பயிர் வயல் வரப்பில் பயறு வகை: மகசூலை அதிகரித்து, மன்வளத்தை கூட்டும்
Share your comments