மாநகர பஸ்களில் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சோதனை ஓட்டமாக மூன்று பஸ்களில் பொருத்தப்பட்ட 'சிசிடிவி' கேமரா. (CCTV Camera) திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, 2,400 பஸ்களில், கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம், தினசரி 3,365 பஸ்களை இயக்குகிறது. இதன் வாயிலாக, நாள்தோறும், 42 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சமீபத்தில், மகளிருக்கு சாதாரண பஸ்களில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநகர பஸ்களில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து உள்ளது.
சோதனை ஓட்டம் வெற்றி
இந்நிலையில், பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டத்தை, மாநகர போக்கு வரத்து கழகம் செயல்படுத்த உள்ளது. 'நிர்பயா' திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, சென்னையில் புதிதாக இயக்கப்படும் சிவப்பு நிற டீலக்ஸ் பஸ்களில், கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிடப்பட்டது. சோதனை ஓட்டமாக, இரண்டு மாதத்திற்கு முன், தடம் எண் 54, பிராட்வே- - பூந்தமல்லி; ஈ 18, கூடுவாஞ்சேரி- - பிராட்வே; ஜி 18, கூடுவாஞ்சேரி- - தி.நகர் ஆகிய மூன்று வழித்தடங்களில், தலா ஒரு பஸ் தேர்வு செய்யப்பட்டு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
பஸ்சின் முன் படிக்கட்டு, பின் படிக்கட்டு எதிர்புறம் தலா ஒரு கேமரா மற்றும் ஓட்டுனர் இருக்கைக்கு எதிரில் இருந்து ஒட்டுமொத்த பஸ்சையும் கண்காணிக்கும் வகையில் ஒன்று என, மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டன. கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம், ஐந்து ஆண்டுகளுக்கு அவற்றை பராமரிக்கும். அந்த நிறுவனத்தினர் மட்டுமின்றி, மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தும், கேமரா பதிவுகளை பார்க்கலாம்.இரண்டு மாதங்களாக இச்சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, முதல் கட்டமாக, 2,400 புதிய பஸ்களில், கேமரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
இறுதிக்கட்டம்
இதற்காக, தனியார் நிறுவன தொழில்நுட்ப குழுவினர், பல்வேறு பிரிவுகளாக, சென்னையில் உள்ள அனைத்து மாநகர பஸ் பணிமனைகளில், இரவு நேரங்களில், பஸ்களில் கேமரா பொருத்துவதற்கான, வடம் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓரிரு மாதங்களில், சென்னையில் இயக்கப்படும், 75 சதவீதம் பஸ்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் வாயிலாக, மாநகர பஸ் பயணியரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், பஸ் ஊழியர்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட உள்ளன. பழைய பஸ்களில் இல்லை!
தற்போது, 2,400 பஸ்களில் மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்திடம், 3,500 பஸ்கள் உள்ளன. புதிய பஸ்களில் முன்னுரிமை அடிப்படையில் கேமரா பொருத்தப்படுகிறது. பழைய பஸ்களில் கேமரா பொருத்துவதா அல்லது அந்த பஸ்களின் ஆயுட்காலம் முடியும் நிலையில், கேமரா கட்டமைப்புடன் புதிய பஸ்களை வாங்குவதா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
விரைவில் ரயில்களிலும் கேமரா!
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை வழக்கிற்கு பின், நிர்பயா திட்டத்தில், அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என, ரயில்வே அதிகாரிகள் கூறினர்.ஆனால், பெரும் தாமதத்திற்கு பின், தற்போது தான், அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி வேகம் எடுத்துள்ளது. விரைவில், சென்னை மற்றும் புறநகரில், 100 சதவீதம் ரயில் நிலையங்களில் கேமரா பொருத்தப்படும். மின்சார ரயில் பெட்டிகளில் கேமரா பொருத்த, தெற்கு ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விரைவில் அதற்கான பணிகளும் துவங்கும் என, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
'ரோமியோ'க்களுக்கு 'செக்'
மாநகர பஸ்களில் 'ரோமியோ'க்களின் நடமாட்டம் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. படிக்கட்டுகளில் பயணிப்பது, பெண் பயணியரை இடிப்பது, சில்மிஷத்தில் ஈடுபடுவது, பிக் பாக்கெட் அடிப்பது போன்ற சமூக விரோத செயல்களும் நடக்கும். சமீபகாலமாக கல்லுாரி, பள்ளி மாணவர்களின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தையும் கண்காணித்து, உடனுக்குடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால், பஸ்களில் கேமரா பொருத்தும் திட்டத்திற்கு, மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் படிக்க
போலீசாருக்கு 8 மணி நேர வேலை: ஐகோர்ட் உத்தரவு!
பெண் விவசாயி வாங்கிய வங்கிக்கடனை அடைத்த நீதிபதி!
Share your comments