பயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பினை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு (PM Modi), தமிழக முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) கடிதம் எழுதியுள்ளார்.
காப்பீட்டுக் கட்டணம்
முதல்வர் ஸ்டாலின், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பினைக் குறைக்கும் வகையில், அதிகபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, முன்பு இருந்தபடி, 49:49:2 என்ற விகிதத்தில் காப்பீட்டுக் கட்டணப் பங்கினைத் திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மற்றும் மத்திய வேளாண் அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வேளாண்மைக்கென தனி வரவு
வேளாண் துறையில் விவசாயிகளின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் சாகுபடி பரப்பளவினை (Cultivation Area) அதிகரித்தல், ஒரு முறைக்கும் மேல் சாகுபடி செய்யும் பரப்பினை இரட்டிப்பாக்குதல் மற்றும் உணவு தானியங்களின் உற்பத்தி திறனை அதிகரித்தல் ஆகிய 3 தொலைநோக்கு பார்வையுடன் வேளாண்மைக்கென தனி வரவு - செலவுத் திட்ட அறிக்கையை நடப்பாண்டு முதல் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை (Crop Insurance) தமிழகம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளினால், காப்பீடு செய்யப்பட்ட பரப்பளவும், பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மத்திய அரசின் பங்கினை 49 சதவீதத்தில் இருந்து, பாசனப் பகுதிகளுக்கு 25 சதவீதமாகவும், மானாவாரி பகுதிகளுக்கு 30 சதவீதமாகவும் குறைத்து நிர்ணயித்திருப்பதால், 2016-17 ல் ரூ.566 கோடியாக இருந்த மாநில அரசின் பங்கு, 2020-21ல் ரூ.1918 கோடியாக (239 சதவீதம்) அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று உள்ள இந்த காலக்கட்டத்தில் மாநில அரசின் நிதிச் சுமை அதிகரித்துவரும் நிலையில், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தமிழக அரசுக்கு சவாலாகவும், கடினமாகவும் உள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை இத்திட்டத்தின் நோக்கத்தையே முடக்கியுள்ளது. எனவே, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கீட்டினைக் குறைக்கும் வகையில், அதிகபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு, காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் விவசாயிகளின் பங்கினை முறையே 49:49:2 என்ற விகிதத்தில் உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என முதல்வர் அக்கடிதத்தில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க
நீர்வாழ் உயிரி வளர்ப்பு மாதிரி திட்டத்தில் பயன்பெற தொழில்முனைவோருக்கு அழைப்பு!
புதிய வாழை ரகங்கள் கண்டுபிடிப்பு: திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையம் அசத்தல்!
Share your comments