சென்னை - திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை வருகிற அக்டோபர் அல்லது நவம்பரில் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் தொடர்ச்சியாக வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னை- கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தென் தமிழகத்தில் பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தி வரும் நெல்லை ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் சேவையினை தொடங்க தொடர்ச்சியாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன.
தென்னக இரயில்வேக்கு வருவாய் ஈட்டும் முக்கிய நிலையங்களில் ஒன்றாக திருநெல்வேலி இருப்பதால், இந்த சந்திப்பு பலவிதமான பிரீமியம் சேவைகளைக் கொண்டிருக்கும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த நான்கு ஆண்டுகளில் கூடுதல் தளம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் முடிக்கப்படும் எனவும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்லிஃப்ட் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள வசதிகளை இறுதி செய்யும் பணிக்காக நெல்லை இரயில் நிலையத்திற்கு ஆர்.என்.சிங் வருகை தந்தார். அப்போது பத்திரிகையாளர்களை சந்திப்பில் சென்னை- நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை குறித்து பதிலளித்தார்.
தற்போது சென்னை- நெல்லை இடையேயான இரயில் பயணம் சுமார் 8 மணி நேரத்திற்கும் அதிகமாகும். வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கும் பட்சத்தில் இந்த காலநேரம் 5 மணி 30 நிமிடம் முதல் 6 மணி நேரம் மட்டுமே ஆகும். அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வந்தே பாரத் ரயில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மற்றும் நெல்லை ரயில் நிலையங்களில் வந்து செல்லும் வந்தே பாரத் ரயிலை பராமரிக்க தேவையான வசதியினை மேற்கொள்ள 5 கோடி மதிப்பிலான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு தான் வந்தே பாரத் சேவை இயங்கும் சில வழித்தடங்களில் பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என ரயில் கட்டணத்தை 25 சதவீதம் வரை குறைக்க ரயில்வே துறை முடிவெடுத்தது. மேலும் வந்தே பாரத் ரயிலின் நிறத்தை வெள்ளையிலிருந்து காவி நிறமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் ரயில்களின் மேற்பகுதியில் அழுக்கு படிவதால் தான் நிறம் மாற்றப்படுவதாக ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் பதிலளித்து இருந்தார்.
திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் இடையே ரயில் பாதை இரட்டிப்பு பணி திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவம்- விதவை என்கிற சொல்லினை மாற்ற கோரிக்கை
Share your comments