1. செய்திகள்

தோட்டக்கலைதுறை சார்பில் கட்டப்பட்ட இரண்டு பூங்காக்கள் திறப்பு!

Daisy Rose Mary
Daisy Rose Mary

வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் சென்னை மாவட்டம், கோபாலபுரம், அவ்வை சண்முகம் சாலையில் 6.83 ஏக்கர் பரப்பளவில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள செங்காந்தள் பூங்கா மற்றும் சென்னை, வண்ணாரப்பேட்டையில் 3.80 ஏக்கர் பரப்பளவில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.

வேளாண்மைத் துறையின் 2020-21ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், அதிகரித்து வரும் சென்னை வாழ் மக்களின் தேவைக்காக செம்மொழிப்பூங்காவிற்கு எதிரில் பசுமையான சூழ்நிலையில் பல்வேறு அம்சங்களை கொண்டு 5 கோடி ரூபாய் மதிப்பில் செங்காந்தள் பூங்கா உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பூங்காக்கள் திறப்பு

அதன்படி சென்னை மாவட்டம், கோபாலபுரம், அவ்வை சண்முகம் சாலையில் 6.83 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் மலரின் பெயரில் செங்காந்தள் பூங்கா அமைக்கும் பணிகள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் மூலம் தொடங்கப்பட்டது. இப்பூங்கா அமைக்கும் பணியின் முக்கியத்துவம் கருதி கொரோனா பெருந்தொற்று காலத்திலும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பணிகள் தொய்வின்றி நடைபெற்றன. தற்பொழுது பணிகள் அனைத்தும் நிறைவுற்று, 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள செங்காந்தள் பூங்காவினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.

இயற்கை சூழல் நிறைந்த பூங்கா!

இப்பூங்காவில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள், 150-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உட்பட 34 ஆயிரம் மலர் மற்றும் அழகுச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பிரத்யேக சிப்பி வடிவிலான நுழைவு வாயில், புல் தரைகள், சிறுவர்கள் விளையாடும் பகுதி, நடைபயிற்சி மேற்கொள்ள 2,200 மீட்டர் நீளத்திற்கான நடைபாதை, யோகா மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பகுதி, நவீன கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கடந்த 16.7.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை வண்ணாரப்பேட்டையில், வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான நிலத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நகரப்புர மக்களைக் கவரும் வகையில் தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

பாரம்பரியத்தை பறைசாற்றும் வண்ணாரப்பேட்டை பூங்கா

அதன்படி, சென்னை, வண்ணாரப்பேட்டையில் பராமரிப்பின்றி இருந்த பழமையான வேளாண்மை பொறியியல் துறையின் இயந்திர பணிமனையினை மாற்றி பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் 3.80 ஏக்கர் பரப்பளவில் 5 கோடி ரூபாய் செலவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பாரம்பரிய பூங்காவை தமிழக முதல்வர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இப்பூங்காவில் 2 மிகப்பெரிய உட்புற தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிறப்பம்சமாக 1930-1940ஆம் ஆண்டு காலகட்டத்தில் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டு, ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட இராட்சத இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பூங்காவில் பல்வேறு வகையான மரங்கள், ஆயிரக்கணக்கான அழகுச் செடிகள் மற்றும் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டு அரங்குகளுடன் பூங்கா

சிறுவர்கள் மற்றும் பொதுமக்களை கவரும் வண்ணம் உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சிக்கூடம், 104 இருக்கைகளுடன் கூடிய காணொலிக் காட்சி அரங்கம், பொதுமக்களிடம் காய்கறி பயிர்களை வளர்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் 2,000 சதுர அடி பரப்பளவில் மண்ணில்லா விவசாயக்கூடம் (Hydroponics unit), நடைபயிற்சி மேற்கொள்ள 1,500 மீட்டர் நீள நடைபாதை, 6,000 சதுர மீட்டர் பரப்பளவில் புல் தரை, நவீன கழிப்பிட வசதி, வாகனங்கள் நிறுத்துமிடங்கள் போன்ற வசதிகளுடன் இத்தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தேங்காய் மற்றும் கொப்பரை விலை வரும் நாட்களில் எப்படி இருக்கும்? TNAU கணிப்பு!

நவரை பருவத்துக்கான நெல் விதைகள் - மானிய விலையில் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!

பயிர் சேத அறிக்கை வரும் 29ம் தேதிக்குள் அளிக்க அலுவலர்களுக்கு உத்தரவு! - விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை!!

விவசாயிகள் அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும் - முதல்வர் அறிவிப்பு!!

English Summary: Chief Minister Edappadi Palanisamy inaugurated two parks built by Horticulture Department in chennai Published on: 23 January 2021, 11:08 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.