காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.30.87 இலட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கரசங்கால் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதி- 1 திட்டத்தின் கீழ் வீடுகளின் சிறு பழுது மற்றும் வர்ணம் அடிக்கும் பணிக்கு ரூ.50,000 வீதம் 86 வீடுகளுக்கும் மற்றும் இதர கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.27.07 இலட்சத்தில் செலவினம் மேற்கொண்டு பணிகள் முடிவுற்றதை தலைமை செயலாளர் ஆய்வு செய்தார். மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நாற்றங்கால் பண்ணை பார்வையிடப்பட்டது. மேற்படி ஆய்வின் போது வனத்துறையில் உள்ளது போல் 0.45 செ.மீ உயரம் உள்ள உரப்பைகளை ஊரக வளர்ச்சி துறையிலும் பயன்படுத்திட அறிவுரை வழங்கப்பட்டது.
ஜல் ஜீவன் மிசன் திட்டத்தின் கீழ் செரப்பனஞ்சேரி ஊராட்சி, ஆரம்பாக்கம் பகுதியில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு 640 வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவது ஆய்வு செய்யப்பட்டது. மேலும் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் 2022-23 கீழ் செரப்பனஞ்சேரி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதியதாக நான்கு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் ரூ.69.17 இலட்சத்தில் கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார்.
வைப்பூர் ஊராட்சியில் அம்ரூத் சரோவர் திட்டத்தில் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்ட நிதியில் திருவரம்புத்தேரியில் சிறு பாசன ஏரி தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.
திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சியில் 2021-22 ஆம் ஆண்டிற்கான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ரூ.25.35 இலட்சத்தில் கட்டப்பட்டு தற்போது பூசு வேலை நடைபெறுவது குறித்து ஆய்வு செய்தார்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெண்களுக்கான கழிவறை கட்டிடம் ரூ.5.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவது ஆய்வு செய்யப்பட்டது. நாவலூர் காலணி ஆலமர தெரு மற்றும் அம்பேத்கர் தெருவில் ரூ.3.82 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஃபேவர் பிளாக் சாலைகளையும் ஆய்வு செய்தார். மேலும் காட்ராம்பாக்கம் பகுதியில் உள்ள பழங்குடியினர் மக்களுக்கு 1.42 கோடி மதிப்பில் 31 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது அரசு முதன்மை செயலளர் பெ.அமுதா, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் மரு.தாரேஸ் அகமது இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் மரு.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., திட்ட இயக்குநர் சா.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மேலும் படிக்க:
டெண்டரில் இனி முறைகேடு செய்ய இயலாதா? தமிழக அரசு போட்ட பலே ஸ்கெட்ச்
சிறு, குறு விவசாயிகளுக்கு டபுள் தமக்கா.. PM kisan நிதியுடன் ஏக்கருக்கு ரூ.5000 நிதியுதவி!
Share your comments