சென்னை மெட்ரோ இரயில் சேவையினை பொதுமக்கள் உபயோக்கிக்கும் தன்மை அதிகரித்து வரும் நிலையில் 100 ரூபாயில் பாதி சென்னையினை வலம் வரும் வகையில் புதிய சுற்றுலா அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் மாசுபாட்டினை கட்டுக்குள் வைக்கும் வகையில் பொது போக்குவரத்தினை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த அரசின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சென்னை போன்ற மாநகரங்களில் மெட்ரோ சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தும் தன்மை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
நடப்பாண்டில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து தற்போது வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வார இறுதியினை சென்னை மெட்ரோ இரயிலுடன் செலவிடுங்கள் என டிவிட்டரில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பதிவிட்டுள்ளது. திட்டத்தின் விவரம் பின்வருமாறு-
150 ரூபாய் மதிப்பிலான 1 நாள் சுற்றுலா அட்டை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த அட்டையினை பயன்படுத்தி நாள் முழுவதும் பயணம் செய்யலாம். இதில் கவனித்தக்க விஷயம் அந்த அட்டையினை நீங்கள் திருப்பி ஒப்படைத்தவுடன் 50 ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும் என்பது தான். இந்த சுற்றுலா அட்டை ஒருநாள் தான் செல்லுபடியாகும்.
சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான டிக்கெட் தற்போது 40 ரூபாய். இதே போல் தான் விம்கோ நகர் செல்லவும். இந்நிலையில் 100 ரூபாயில் பாதி சென்னையை இப்போது சுற்றி வரலாம் என்பதால், இந்த சுற்றுலா பயண அட்டை திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கியுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ் அப் டிக்கெட் மற்றும் Paytm App போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% வரை கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் எண் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சென்னையில் மெட்ரோவில் புதிய வழித்தட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. அதுவும் முடிவுக்கு வரும் பட்சத்தில் சென்னை நகர் முழுவதும் மெட்ரோவினால் இணைக்கப்படும். இதனால் பயண கட்டணம், பயண நேரம், போக்குவரத்து நெரிசல் போன்றவையும் வெகுவாக குறையும் என நம்பலாம்.
மேலும் காண்க:
UPI ATM- டெபிட் கார்டுகளை தூக்கிப்போடும் நேரம் வந்தாச்சு!
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.160 குறைந்தது தங்கம்- இன்றைய விலை நிலவரம்
Share your comments