விலை ஆதரவு திட்டத்தின் கீழ் தென்னை விவசாயிகள் பயன்பெற கொப்பரை கொள்முதல் ஏப்ரல் 2023 முதல் தொடங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தகவல் வெளியிட்டுள்ளார்.
தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவைக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60/-க்கும், பந்து கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.117.50/-க்கும் விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்திட அரசு அனுமதி வழங்கியுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. (01.04.2023) தொடங்கும் கொள்முதலானது 30.09.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது.
தேங்காய் கொப்பரைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தர அளவு மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை தொடர்பு கொள்ளலாம். விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தாங்கள் உற்பத்தி செய்யும் செய்யும் கொப்பரையினை விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விற்பனை செய்து பயன்பெறுமாறு கோயம்புத்தூர் மாவட்ட கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
விலை ஆதரவு திட்டம்:
விவசாயிகளின் நலன்களுக்குப் பெரிதும் உதவும் வகையில் அவர்களது வருவாய் இழப்பை தடுக்கும் விதத்தில் விலை ஆதரவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காரீப் பருவத்தில் விளையும் வேளாண் பொருட்களுக்கு அவற்றின் உற்பத்திக்கான செலவைப் போல் ஒன்றரை மடங்கு அதிகமான விலையை அரசு இத்திட்டத்தின் அடிப்படையில் வழங்கும். இந்த குறைந்தபட்ச ஆதரவு விலையானது விவசாயிகளுக்கு நல்ல வருவாயை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொப்பரைத் தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக்கணக்குப் புத்தக நகல்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பதிவு செய்து, அரசு நிர்ணயித்துள்ள தரத்துக்கேற்ப, நன்கு உலரவைத்து, சுத்தமான கொப்பரைகளை தரம் பிரித்து கொள்முதலுக்கு கொண்டு வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், 2023 ஆம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வேளாண் செலவுகள் மற்றும் விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் தென்னை அதிகமாக விளையும் மாநிலங்களின் கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் விலைகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நிறுவனம் (NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகியவை கொப்பரை மற்றும் உமி நீக்கப்பட்ட தேங்காயை விலை ஆதரவு திட்டத்தின் (PSS) கீழ் கொள்முதல் செய்வதற்கான மத்திய முகமைகளாக (CNA) தொடர்ந்து செயல்படும்.
மேலும் காண்க:
தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள்,பணியாளர்கள் நல வாரியம்- அரசின் சார்பில் வழங்கும் சலுகை என்ன?
Share your comments