தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை மற்றும் நெகிழி இல்லா தருமபுரி விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒருபகுதியாக நெகிழி இல்லா தருமபுரி விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்த தொடர் ஓட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி செந்தில் நகர், இலக்கியம்பட்டி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நெசவாளர் காலனி வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவு பெற்றது. இந்த ஓட்டத்தில் கலந்து கொண்டு முதல் இடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000 பரிசு வழங்கப்பட்டது. இதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்த உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மஞ்சப்பையுடன் கூடிய மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் தொடர் ஓட்டத்தில் பங்குபெற்று முதல் 5 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கே.குணசேகரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆ.நித்ய லட்சுமி, உதவி பொறியாளர் பா.லாவண்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கேசவகுமார், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பரமேஷ்வரன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள தகவலின்படி, 'இந்திய அளவில் ஒவ்வொரு நாளும் சுமார் 15,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன, அதில் சுமார் 40 சதவீதம் சேகரிக்கப்படாமலேயே உள்ளது' என கூறப்பட்டுள்ளது.
இதன் அபாயத்தை உணர்ந்து, 2019 ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாலித்தீன் கவர்கள் உட்பட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இருப்பினும் சந்தைகளில் பாலித்தீன் பயன்பாடு தற்போது வரை நீடித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
மீனவர்களின் நலனுக்காக என்ன பண்ணியிருக்கீங்க? - ஒன்றிய அமைச்சர் விளக்கம்
Share your comments