பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 59. அவரது திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உயிர் பிரிந்தது (Dead)
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில், விவேக்கிற்கு நேற்று, காலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக வடபழநியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகளில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில், உயிர் காக்கும், 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5 மணியளவில் நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்தது.
விவேகானந்தன் என்ற இயற்பெயர் கொண்ட விவேக்கிற்கு, அருள்செல்வி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
பிறப்பு (Birth)
இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் 1961ம் வருடம் நவம்பர் 19ம் தேதி விவக் பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த நடிகர் விவேக், 1986-92 ஆம் ஆண்டுகளில் தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றினார்.
சினிமா வாய்ப்பு (Cinema opportunity)
இயக்குனர் கே.பாலசந்தரால் 1987 ம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் விவேக். இந்தப் படத்தில் இவர் பேசிய இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் மிகவும் பிரபலம். .
அவருடைய அற்புத நடிப்பாற்றலால் அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்துத் தந்தது. புதுப்புது அர்த்தங்கள், உழைப்பாளி, நான்பேச நினைப்பதெல்லாம், கண்ணெதிரே தோன்றினாள், எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி, அந்நியன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் விவேக் நடித்துள்ளார்.
பன்முகத் தன்மை (Diversity)
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சுந்தர் சி, பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் விவேக் நடித்து வந்தார். அவருடைய நகைச்சுவைக்கு ஏராளமான ரசிகர்கள் தழிழ்த்திரை உலகில் உள்ளனர். தன் யதார்த்தமான நகைச்சுவை நடிப்பால் மக்கள் பல்வேறு நல்ல கருத்துக்களைக் கொண்டு சென்றவர்.
சின்னக் கலைவாணர்
இவ்வாறாக சினிமாவில் சீர்திருத்தக்கருத்துக்களைப் பரப்பியதால், சின்னக் கலைவாணர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்.
மரம் நட மன்றாடியவர் (Tree Plantation|)
திரைப்பட நடிகர் விவேக் சினிமாவில் நடிப்பதுடன், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மீது கொண்ட பற்றால், மரக்கன்றுகளை நடுவதிலும் ஆர்வம் செலுத்தினார்.
அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.
கொரோனா விழிப்புணர்வு (Corona Awareness)
மேலும், கொரோனா தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கொரோனா தடுப்பூசி குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தன் குழுவினருடன், நேற்று முன்தினம், சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், 'கோவேக்சின்' தடுப்பூசி போட்டுக் கொண்டார். விவேக்கிற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால், அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று கூறினர்
நடிகர் விவேக் மறைவு திரையுலகினரையும், அவரது லட்சக்கணக்கான ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விவேக்கின் மறைவுக்கு திரைத்துறையினர் மட்டுமல்லாமல், பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க...
PMKMY-விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியத் திட்டம் - உங்கள் பெயரைப் பதிவு செய்வது எப்படி?
அனுபவ வயதில் இளமைக்கு வித்திடும் ''அடல் ஓய்வூதிய திட்டம்''!
கூலித்தொழிலாளியா நீங்கள் ? இந்தத்திட்டத்தில் சேர்ந்தால், மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்!
Share your comments