பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், வர்த்தக LPG சிலிண்டர்களின் விலையை ரூ.100 வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வானது இன்று (நவம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
செப்டம்பர் மாதம் எண்ணெய் நிறுவனங்கள் 19 கிலோ வர்த்தக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை 158 ரூபாய் குறைத்திருந்தன. அக்டோபர் மாதம் வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.209 உயர்த்தப்பட்டன. தொடர்ந்து இந்த மாதமும் உயர்வை சந்தித்துள்ளதால் வர்த்தக வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் மாற்றமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்த்தபட்ட விலையில் அடிப்படையில் மாநிலம் வாரியாக வணிக ரீதியான LPG சிலிண்டர்களின் சமீபத்திய விலை நிலவரம் பின்வருமாறு-
- டெல்லி- ரூ 1,833
- மும்பை- ரூ 1,785
- சென்னை- ரூ.1,999.50.
- பெங்களூரு - ரூ 1,914.50
- கொல்கத்தா- ரூ 1,943
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மாற்றமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள கடந்த மாதம் விற்ற அதே விலை தற்போதும் நீடிக்கிறது. அதன்படி புதுதில்லியில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.903, கொல்கத்தாவில் ரூ.929, மும்பையில் ரூ.902.5, சென்னையில் ரூ.918.5 என தொடர்ந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாத பிற்பகுதியில், நுகர்வோருக்கு ஒரு பெரிய நிவாரணமாக, ஒன்றிய அரசு உள்நாட்டு எல்பிஜியின் விலையை 14.2 கிலோ சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைத்தது. இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசின் உஜ்வாலா மானியத் திட்டத்தின் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ஒட்டுமொத்தமாக ரூ.400 குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி, உஜ்வாலா திட்டப்பயனாளிகளுக்கான மானியத்தை மேலும் 100 ரூபாய் அதிகரிக்க அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.
ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருவதோடு, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தனர். கடைசியாக வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை கடந்த மார்ச் 1 ஆம் தேதி திருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்துக்கு மாநிலம் சிலிண்டர் விலை மாறுவது ஏன்?
ஒவ்வொரு குடும்பமும் ஒரு வருடத்தில் தலா 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற இயலும். PAHAL (எல்பிஜியின் நேரடி பயன் பரிமாற்றம்) திட்டத்தின் கீழ், நுகர்வோர் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்களைப் பெறுகின்றனர். மாநில அரசு விதிக்கும் வரிகள் காரணமாக உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடுகிறது.
எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் LPG சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விலை நிர்ணயம் அந்நிய செலாவணி விகிதங்கள், கச்சா எண்ணெய் விலை போன்ற பல காரணிகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிடுகின்றனர். வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லையென்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் காண்க:
கரண்ட் பில் கட்ட சொல்லி போன் வருதா? இதை நோட் பண்ணுங்க
அடுத்த 5 நாட்களில் கனமழை பெய்யும் மாவட்டங்களின் லிஸ்ட்- இவ்வளவு பெருசா?
Share your comments