தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில் 2012-ம் ஆண்டில் குறைந்த விலைக்கு உணவு விற்பனை செய்யும் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. முதலில் சென்னையில் திறக்கப்பட்ட அம்மா உணவகம் பிறகு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ஏழை மக்கள் பலரும் அம்மா உணவகத்தில் தொடர்ந்து உணவு உண்டு தங்கள் பசியைப் போக்கிவருகின்றனர். இந்தநிலையில், கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு அம்மா உணவகம் செயல்படுமா என்று கேள்வி எழுந்த நிலையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று அரசு அறிவித்தது.
இருப்பினும், அம்மா உணவகங்கள் முன்புபோல முறையாக செயல்படவில்லை என்று புகார்கள் எழுந்துவருகின்றன. அதேபோல, மதுரையில் உள்ள பல அம்மா உணவகங்களில் ஏற்கனவே பணிபுரிந்த பெண் பணியாளர்கள் பணி நீக்கம் செய்துவிட்டு திமுக ஆதரவுடைய பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும், இதனை சாதகமாக பயன்படுத்தி திமுக கவுன்சிலர்கள் சிலர் அவரவர் பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும் கடந்த காலங்களில் சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில், மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதித்துள்ள 1 ரூபாய்க்கு விற்கப்படும் இட்லி மற்றும் 5 ரூபாய்க்கு விற்கப்படும் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லேட் என தனியார் உணவகத்தில் கிடைப்பது போன்று பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மதிய வேளைகளிலும் சாதத்துடன் ரசம், மோர், ஆம்லேட் உள்ளிட்டவை விற்கப்பட்டு வருகிறது.
ஏழை எளியோரின் பசி போக்க செயல்பட்ட அம்மா உணவகத்தை திமுக கவுன்சிலர்கள் சிலர் தங்களுக்கு லாபம் ஈட்டும் உணவகமாக மாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் அது குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க:
சென்னையில் 3 நடமாடும் அம்மா உணவகங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!
Share your comments