சென்னை மருத்துவக் கல்லூரி சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தின் ஊரக பகுதிகளில் விவசாயப் பணிகளில் ஈடுபடும் நபர்களிடத்தில் சிறுநீரக செயலிழப்பு பாதிப்புகளை அறிவதற்கான ஆய்வு விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு தமிழகம் முழுவதும் சிறுநீரக பாதிப்பு குறித்த தகவல்களைத் திரட்டுவதற்கான கள ஆய்வை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தேசிய நல்வாழ்வு குழும நிதி பங்களிப்புடன் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை, சமூக நோய்த் தொற்று துறை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.
பொது சுகாதாரத் துறையினை சேர்ந்த 500 பணியாளர்கள் தமிழகம் முழுவதும் கள ஆய்வில் ஈடுபட்டனர். 4,682 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட பகுப்பாய்வில் அதிர்ச்சி தரும் வகையில் முடிவுகள் கிடைத்தன.
இணை நோய்களின் தாக்கம் இல்லாத 53 சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைவிட கவலைக்குரிய விஷயம் அவர்களுக்கு எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை கண்டறிய இயலவில்லை.
சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அமைப்பு சாரா பணியாளர்கள். அதிலும் விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுபவர்கள் என தெரிய வந்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் ஊரகப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவு கண்டறியப்பட்டது.
இதையடுத்து விவசாயப் பணிகளில் ஈடுபடுவோரின் சிறுநீரக செயல்திறனை அறிவதற்கான கள ஆய்வினை தீவிரப்படுத்துமாறு பொது சுகாதார துறையினருக்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் கள ஆய்விற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் ஆய்வுப் பணி தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த கள ஆய்வினை மேற்கொள்ள உள்ள ஆய்வக நுட்பனர்கள், மருத்துவக் களப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணி தற்போது நடைப்பெற்று வருகிறது. இப்பணி நிறைவடைந்ததும் கள ஆய்வு பணி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அமைப்பு சாரா தொழிலாளர்களான விவசாயிகள் மற்றும் கட்டிடத் தொழிலாளர்கள் வெயிலில் நேரடியாக அதிக நேரம் பணியாற்றி வருகின்றனர். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தொடர்ந்து கையாண்டு வருவது அவர்களது சிறுநீரக பாதிப்புகளுக்கு காரணமாக இருக்குமா என்பது ஆய்வின் முடிவில் தான் உறுதியாக தெரிய வரும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
2000 ரூபாயினை வங்கியில் மாற்ற அடையாள அட்டை வேணுமா? SBI விளக்கம்
Share your comments