நெருக்கடியை சமாளிக்க, 40 லட்சம் பேல் பருத்தியை வரியின்றி இறக்குமதி செய்ய வேண்டும் என, ஜவுளித்தொழில் அமைப்புகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) தலைவர் ரவிசாம், இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.டி.ஐ.,) தலைவர் ராஜ்குமார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தலைவர் ராஜா சண்முகம் ஆகியோர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு பிப்ரவரியில் பருத்தி பஞ்சு விலை ஒரு கேண்டி (355 கிலோ எடை) 44 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. தற்போது 90 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பருத்தியை மையமாக கொண்டு செயல்படும் ஜவுளித்தொழில்கள் அனைத்தும் பின்னடைவை சந்தித்துள்ளன.
பருத்தி இறக்குமதி (Cotton Import)
கொரோனா பிடியிலிருந்து ஜவுளித்துறை வெளிவந்தாலும், தற்போது ஜவுளித்துறையை சார்ந்த மில்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் பருத்திக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். வர்த்தகர்கள் ஆன்லைன் தளங்களை சாதகமாக பயன்படுத்தி, பருத்தியை பதுக்கல் செய்து அன்றாட விலையை உயர்த்தி யூக பேர வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால் பருத்திக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கி நம் போட்டித்திறனை அதிகரிக்காவிட்டால், ஆயத்த ஆடை உற்பத்தி கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும். நுாற்பாலைகளுக்கு 40 நாட்களுக்கு தேவையான பருத்தி மட்டுமே கையிருப்பில் உள்ளது. வழக்கமாக ஆறு மாதங்களுக்கான பருத்தி கையிருப்பில் இருக்கும். தற்போது 320 லட்சம் பேல் பஞ்சு வரவேண்டிய நிலையில், 240 லட்சம் பேல் மட்டுமே சந்தைக்கு வந்துள்ளது.
பருத்தி விலையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், ஏற்றுமதி திறனை அதிகரிக்கவும், பருத்தி சார்ந்த துறையில் நேரடியாக பணிபுரியும் மூன்று கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், 40 லட்சம் பேல் பஞ்சு, வரியின்றி உடனடியாக இறக்குமதி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.
மேலும் படிக்க
Share your comments