தேஜ் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுத்தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புயல் மற்றும் வானிலை முன்னறிவிப்பு, மீனவர்களுக்கான எச்சரிக்கை விவரங்கள் வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
1.நேற்று (21-10-2023) காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (22-10- 2023) காலை 08:30 மணி அளவில் பரதீப் (ஓடிசா)-ற்கு தெற்கே சுமார் 590 கிலோ மீட்டர் தொலைவிலும், டிகா (மேற்கு வங்காளம்)- விற்கு தெற்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவுகிறது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக் கூடும்.
2.நேற்று (21-10-2023) தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய 'தேஜ் புயல் நேற்று நண்பகல் தீவிர புயலாக வலுப்பெற்று, நேற்று இரவு மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (22-10-2023) காலை 0830 மணி அளவில் அதி தீவிர புயலாக மேலும் வலுப்பெற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது மேலும் வடமேற்கு திசையில் அடுத்த மூன்று தினங்களில் நகர்ந்து 24-10-2023 அன்று மிகத்தீவிர புயலாக ஏமன் மற்றும் ஓமன் கடற்கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22.10.2023: தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23.10.2023 மற்றும் 26.10.2023: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27.10.2023 முதல் 28.10.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
Read more:
மகளிருக்கான ரூ.1000- ஏமாற்ற நினைப்பவர்களுக்கு புது செக் வைத்த அரசு
Share your comments