ஈரோடு மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால் மலைப்பகுதியில் உள்ள தோட்டங்களில் மழைநீர் தேங்கி பயிரிடப்பட்ட காய்கறி பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழை (Heavy Rain)
ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தது. நேற்று முன்தினம் பெய்த விடிய விடிய பெய்த கனமழையால் தலமலை, நெய்தாளபுரம், முதியனூர், சிக்கள்ளி, சூசையபுரம், மெட்டல் வாடி, பனாகல்லி, திகினாரை, கெட்டவாடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள குளம் குட்டைகள் நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்து விளை நிலங்களிலும் தோட்டங்களிலும் புகுந்தது.
இந்த நிலையில் வரலாறு காணாத கனமழையால் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு நாள் ஆகியும் தண்ணீர் வடிந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களில் தண்ணீர் புகுந்து மழை நீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதிகளில் பயிரிட்டிருந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், தக்காளி, மக்காச்சோளம், காய்கறிகள் உள்ளிட்ட பயிர்கள் நீர் வடியாததால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது உருளைக்கிழங்கு அறுவடை சீசன் என்பதால் அதிகளவில் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். சராசரியாக உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 70 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை தற்பொழுது இழப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை (Farmers Request)
விவசாயிகள் சற்றும் எதிர்பார்க்காத இந்த மழையால் தற்பொழுது அவர்களுடைய மொத்த வாழ்க்கை மாறியுள்ளது. அரசாங்க மானியத் திட்டங்களில் உதவி கிடைக்காத நிலையிலும் அதிக அளவு முதலீடு செய்து பயிர்களைக் காத்து அறுவடை செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்படாத காரணத்தால் வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க
விதைப்பண்ணை அமைப்பது எப்படி? விதிமுறைகள் சொல்வது என்ன?
தேங்காய் விற்பனையில் குவியும் வருமானம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
Share your comments