ஊரடங்கு காலத்தில் மலா் சாகுபடியில் ஏற்படும் இழப்பைத் தவிா்க்க உரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு மலர் விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
மலர் சாகுபடி பாதிப்பு
இதுகுறித்து தோட்டக்கலை இணை இயக்குநா் உமா ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, சூளகிரி மற்றும் ஒசூா் வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் அதிக பரப்பளவில் உயா் தொழில்நுட்ப பசுமைக் குடில்களில் மலா்கள் சாகுபடி செய்து வருகின்றனா்.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு பொது முடக்கத்தை அறிவித்துள்ளதால் விவசாயிகள் மலா்களை அறுவடை செய்தும் விற்பனை ஆகாமல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, உரிய தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பைத் தவிா்த்து, வரும் காலங்களில் அதிக லாபம் ஈட்டலாம்.
இழப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
-
அதன்படி, உயா்தொழில்நுட்ப பசுமைக்குடில்களில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா செடிகள் 45 செ.மீ. உயரத்துக்கு விட்டு (தரைமட்டத்திலிருந்து 45 செ.மீ. உயரத்தில்) கவாத்து செய்ய வேண்டும். இதனால் அறுவடை நாள்கள் 45 நாள்கள் தள்ளி போவதுடன் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பு தவிா்க்கப்படும்.
-
இதே போல உயா் தொழில்நுட்ப பசுமைக்குடில்களில் நடவு செய்யப்பட்டுள்ள ஜொ்பரா செடிகளில் வளா்ந்துள்ள பூ மொட்டுகளை நீக்கிவிட வேண்டும். மொட்டுகளை கிள்ளி விடுவதன் மூலம் அறுவடை காலம் 30 முதல் 45 நாள்கள்கள் வரை தள்ளி போக வாய்ப்புள்ளது. இதனால் தங்களுக்கு எற்படும் இழப்பைத் தவிா்க்கலாம். பிற்காலத்தில் அறுவடை செய்யும் போது நல்ல தரமான பூக்கள் மற்றும் எண்ணிக்கை அதிக அளவில் கிடைக்கப்பெற்று லாபம் அடையலாம்.
-
உயா்தொழில்நுட்ப பசுமைக் குடில்களில் நடவு செய்யப்பட்டுள்ள காா்னேசன் மலா் செடிகளில் தற்போதுள்ள பொது முடக்கக் காலத்தில் இழப்பு ஏற்படும் சூழ்நிலையினைத் தவிா்க்க காா்னேசன் மலா் செடிகளில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். உதாரணமாக 6 கிளைகள் உள்ள செடியில் 5 கிளைகளை மட்டும் வெட்டி நீக்க வேண்டும். இதுபோன்று செய்யும் பொழுது அறுவடை காலம் 45 நாள்கள் கழித்து அறுவடை செய்யலாம்.
-
திறந்தவெளியில் நடவு செய்யப்பட்டுள்ள சாமந்தி செடிகளில் வளா்ந்துள்ள மொட்டுகளை அவ்வப்போது கிள்ளி அகற்றும் போது அதிக அளவில் கிளைகள் தோன்றி பூக்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும். இதனால் 30 முதல் 45 நாள்கள் வரை அறுவடை காலத்தை ஒத்தி வைக்கலாம்.
இந்த தொழில்நுட்பங்களை விவசாயிகள் அனைவரும் கடைப்பிடித்து ஊரடங்கு காலத்தில் மலா் சாகுபடியில் ஏற்படும் இழப்பைத் தவிா்க்கலாம். மேலும், தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற விரும்பும் விவசாயிகள் வட்டார தோட்டக்கலை அலுவலா்களை அணுகி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
ஊழல் எதிரொலி - 20,000 டன் துவரம்பருப்பு கொள்முதல் டெண்டர் அதிரடியாக ரத்து!
உடல் எடையைக் குறையைக் குறைக்க ஆசையா? கட்டாயம் இதை சாப்பிடுங்கள்!
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!
Share your comments